ஆன்மிகம்
குரு பகவான்

குருப்பெயர்ச்சி யாருக்கு நன்மை

Published On 2019-10-31 08:54 GMT   |   Update On 2019-10-31 08:54 GMT
குரு இம்முறை ஆட்சி நிலை பெறுவதால் கோட்சார பலன்கள் எப்படியிருந்தாலும் பிறந்த ஜாதகத்தில் குரு பகவானை யோகராகக் கொண்டவர்களுக்கும் குருதசை குருபுக்தி நடப்பவர்களுக்கும் இந்த குரு மாற்றத்தால் மிக நல்ல யோக பலன்களே நடக்கும் என்பது உறுதி.
மனிதனுக்குத் தேவையான அனைத்து பாக்கியங்களையும், சுகங்களையும் தக்க நேரத்திலும், நேர்மையான வழிகளிலும் வழங்கும் முதன்மையான நல்ல கிரகமும், இயற்கைச் சுபர்களில் முதல்வருமான குருபகவான் இம்முறை விருச்சிக ராசியிலிருந்து தனது சொந்த ராசியான தனுசுவுக்கு வரும்
4-11-2019 அன்று (திருக்கணிதப்படி) பெயர்ச்சியாகிறார். அவருக்கு வலிமை தரும் நிலையான ஆட்சி வலுவில் சுமார் 13 மாதங்கள் அங்கே இருப்பார்.

தமிழ்நாட்டில் பெரும்பாலான கோவில்களில் கடைப்பிடிக்கப்படும் வாக்கியப் பஞ்சாங்க முறைப்படி இந்தப் பெயர்ச்சி சற்று முன்னதாக 28-10-2019 அன்று நமது ஆலயங்களில் கொண்டாடப்படும்.

உலகம் முழுவதிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாக்கிய முறை ஒழிக்கப்பட்டு திருக்கணித முறையே கடைப்பிடிக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் தான் இன்னும் பூனைக்கு யார் மணி கட்டுவது எனும் நிலையில் வாக்கிய முறை கைவிடப்படாமல் இருக்கிறது.

வரருசி என்பவரால் சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட வாக்கியப் பஞ்சாங்கம் அடுத்தடுத்து வரும் சில கணக்குத் தவறுகளால் பிழையான கிரக நிலைகளைக் காட்டுகிறது என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இதனால் இந்தப் பஞ்சாங்கம் தமிழகத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் ஒழிக்கப்பட்டு விட்டது.

உலகப் பிரசித்தி பெற்ற திருப்பதி வேங்கடவனின் ஆலயம் உள்ளிட்ட ஆந்திராவின் அனைத்து திருக்கோவில்களிலும், கேரளா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும், காஞ்சிபுரம் ஸ்ரீசங்கர மடத்திலும் திருக்கணிதப்படி நவம்பர் 4-ம் தேதிதான் குருப்பெயர்ச்சி கொண்டாடப்படுகிறது. எனவே வாக்கியப்படி குருப்பெயர்ச்சி அன்று குருபகவானை வழிபடுவதை விட ஜோதிடம் உணரப்பட்ட காலத்தில் நமது தெய்வாம்சம் பொருந்திய ஞானிகளான பராசரர், வராகமிகிரர், காளிதாசர் போன்றவர்களால் அருளப்பட்ட முறையான திருக்கணிதப்படி வழிபடுவதே முழுமையான நன்மைகளைத் தரும். எனவே குருப்பெயர்ச்சிக்காக வருகின்ற 4-11-2019 அன்று கோவிலுக்குச் செல்வதே முறையானது.

குருவின் இந்த மாற்றத்தால் அவர் பார்வைபடும் ராசிகளான மேஷம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசிகளும் விருச்சிகம். கும்பம் ஆகிய ராசிக்காரர்களும் மிகுந்த சிறப்புக்களை பெறுவார்கள்.

அடுத்து மகரம், கடகம், துலாம், கன்னி, தனுசு, ரிஷபம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு அளவான நற்பலன்களை குருபகவான் வழங்குவார் என்றாலும் நிச்சயமாக கெடுதல்களைத் தரமாட்டார். குருவால் இவர்களுக்கு குறைகள் எதுவும் வரவாய்ப்பில்லை.

இதில் விருச்சிக ராசிக்கு இன்னும் சில வாரங்களில் ஏழரைச் சனி முழுமையாக விலகுவதும், தனுசு ராசியை வேதனைப்படுத்திக் கொண்டிருக்கும் ஜென்மச் சனி நீங்குவதும் அவ்விரு ராசிக்காரர்களையும் “அப்பாடா” என்று மூச்சு விடச் செய்யும். அதிலும் விருச்சிக ராசி கடந்த சில வருடங்களாக ஏழரைச்சனியால் அதிகமான பின்னடைவுகளை சந்தித்து விட்டது. இனி அது நீங்கி விருச்சிகம் முன்னேற்றத்தை நோக்கிச் செல்லும். ரிஷபத்திற்கு அஷ்டமச்சனி நிறைவடைவதும் வேலை,தொழில் விஷயங்களில் சிறப்பே.

குரு இம்முறை ஆட்சி நிலை பெறுவதால் கோட்சார பலன்கள் எப்படியிருந்தாலும் பிறந்த ஜாதகத்தில் குரு பகவானை யோகராகக் கொண்டவர்களுக்கும் குருதசை குருபுக்தி நடப்பவர்களுக்கும் இந்த குரு மாற்றத்தால் மிக நல்ல யோக பலன்களே நடக்கும் என்பது உறுதி.

மேலும் கெடுதலான பலன்கள் நடக்கும் காலகட்டம் என்றாலும் கூட நமது சித்தர்களும், ஞானிகளும் நமக்கு சொல்லியுள்ள முறையான பரிகாரங்களை செய்வதன் மூலம் நம்மை கெடுதல்களில் இருந்து காத்துக் கொள்ளலாம் என்பதும் நினைவில் கொள்ளத் தக்கது.

ஆதித்ய குருஜி செல்: 8870 99 8888
Tags:    

Similar News