செய்திகள்
சஞ்சீரி தியோபுஜாரி-கவுஸ்துப் நிர்மல் தம்பதி.

அமெரிக்காவில் படகில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய தம்பதி பலி?

Published On 2019-09-06 04:35 GMT   |   Update On 2019-09-06 04:35 GMT
அமெரிக்காவில் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் இந்திய தம்பதி பலியாகிவிட்டதாக அஞ்சப்படுகிறது.
வாஷிங்டன்:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டாகுரூஸ் தீவில் ‘ஸ்கூபா டைவிங்’ எனப்படும் ஆழ்கடல் நீச்சல் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக 6 ஊழியர்கள் மற்றும் 33 சுற்றுலா பயணிகளுடன் படகு ஒன்று சாண்டாகுரூஸ் தீவுக்கு சென்றது.

நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்தபோது இந்த படகில் திடீரென தீப்பிடித்தது. இந்த கோர விபத்தில் படகில் இருந்த 34 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஊழியர்கள் 5 பேர் மட்டும் கடலில் குதித்து உயிர் தப்பினர்.

இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் சதீஸ் தியோபுஜாரிஸ் என்பவரின் மகள் சஞ்சீரி தியோபுஜாரி மற்றும் மருமகன் கவுஸ்துப் நிர்மல் ஆகிய இருவரும் கலிபோர்னியா படகு தீவிபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

பல் மருத்துவரான சஞ்சீரி தியோபுஜாரி, அமெரிக்கா நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிய இந்தியரான கவுஸ்துப் நிர்மலை 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, அமெரிக்காவில் குடியேறினார்.

இந்த சூழலில் சஞ்சீரி தியோபுஜாரி-கவுஸ்துப் நிர்மல் தம்பதி சாண்டாகுரூஸ் ஆழ்கடல் நீச்சல் நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தெரிகிறது. படகு தீ விபத்தில் ஊழியர்கள் 5 பேரை தவிர அனைவரும் பலியாகிவிட்டதாக கூறப்படும் நிலையில், சஞ்சீரி தியோபுஜாரி-கவுஸ்துப் நிர்மல் தம்பதியும் இறந்திருக்கக்கூடும் என நம்பப்படுகிறது.

எனினும் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடவில்லை.

Tags:    

Similar News