செய்திகள்
பிரியங்கா காந்தி மவுன விரதம்

மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக்கோரி பிரியங்கா காந்தி மவுன விரதம்

Published On 2021-10-11 12:49 GMT   |   Update On 2021-10-11 13:21 GMT
லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
லக்னோ:

உத்தரபிரதேசத்தின் லகிம்பூர் கேரி மாவட்டத்தில் கடந்த 3-ம் தேதி போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது பாஜகவினர் சென்ற கார் மோதியது. இதில், சில விவசாயிகள் உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 4 விவசாயிகள், ஒரு பத்திரிக்கையாளர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர். 

விவசாயிகள் மீது மோதிய காரில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வன்முறை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்த வன்முறை தொடர்பாக ஆஷிஷ் மிஸ்ரா மீது கொலைவழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 



ஆஷிஷ் மிஸ்ரா கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. ஆஷிஷ் மிஸ்ரா தற்போது சிறையில் உள்ளார்.

இந்நிலையில், லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் மத்திய மந்திரி அஜய் மிஸ்ரா தனது பதவியை ராஜிமானா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. 

அந்த வகையில், அஜய் மிஸ்ராவை மத்திய மந்திரி பதவியில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி இன்று மவுன விரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். லக்னோவில் காந்தி சிலை முன் காங்கிரஸ் தலைவர்களுடன் பிரியங்கா காந்தி மவுன விரதத்தில் ஈடுபட்டு வருகிறார்.


Tags:    

Similar News