செய்திகள்
மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயிலில் பயணித்த சுற்றுலா பயணிகளை படத்தில் காணலாம்.

மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை தொடங்கியது

Published On 2021-10-09 04:26 GMT   |   Update On 2021-10-09 04:26 GMT
ரெயில் பாதையில் மண் சரிவால் நிறுத்தப்பட்ட மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை இன்று காலை தொடங்கியது.
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பெய்து வரும் பலத்த மழையால் கடந்த 6-ந்தேதி இரவு மேட்டுப்பாளையம்- ஊட்டி மலைரெயில் பாதையில் அடர்லி- ஹில்குரோவ் இடையே மண் சரிவு ஏற்பட்டதுடன், ரெயில் பாதையில் பாறைகளும் உருண்டு விழுந்ததால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து 7 மற்றும் 8-ந் தேதி ஆகிய 2 நாட்கள் மலைரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரெயில்வே தொழிலாளர்கள் ரெயில் பாதையை சீரமைக்கும் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டனர்.

ரெயில் பாதையில் விழுந்து கிடந்த பாறைகளை வெடி வைத்து தகர்த்தனர். மேலும் ரெயில் பாதையின் குறுக்கே விழுந்து கிடந்த மரங்களையும் வெட்டி அகற்றினர். ரெயில் பாதையை சீரமைக்கும் பணி முழுவதும் நேற்று மாலையுடன் முடிவடைந்தது.

இதனைத் தொடர்ந்து மேட்டுப்பாளையம்- ஊட்டி மலை ரெயில் சேவை இன்று தொடங்கியது. இன்றும், நாளையும் விடுமுறை நாள் என்பதால் ஊட்டிக்கு செல்வதற்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் காலை முதலே ரெயில் நிலையத்திற்கு கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர்.

இன்று காலை 7.10 மணிக்கு மேட்டுப்பாளையத்திலிருந்து ஊட்டிக்கு வழக்கம்போல் மலைரெயில் புறப்பட்டுச் சென்றது. இதில் 180 பயணிகள் பயணித்தனர். அவர்கள் மலை ரயில் புறப்பட்டதும் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
Tags:    

Similar News