செய்திகள்
பாகிஸ்தான் கொடி

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் முழு ஆதரவு அளிக்கிறது- இந்தியா குற்றச்சாட்டு

Published On 2021-10-08 08:18 GMT   |   Update On 2021-10-08 14:04 GMT
இந்தியாவின் பெயர் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தனது குற்றங்களை பாகிஸ்தான் நிராகரித்து இந்தியா பற்றி பேசுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

புதுடெல்லி:

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் 6-வது அமர்வு (சட்டம்) ‘சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்தல்’ என்ற தலைப்பில் நடை பெற்றது.

இந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையை முன்நிறுத்தி ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் காஜல்பட் மறுத்தார். இந்த கூட்டத்தில் காஜல் பட் பேசியதாவது:-

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தனது பொய்களை கட்டவிழ்க்க மீண்டும் ஒருமுறை இந்த அமர்வை பயன்படுத்தி இருக்கிறது. இங்கு முக்கிய குற்றவாளியே பாகிஸ்தான் நாடுதான். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் அந்த நாடு தன்னை பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுபோல காட்டிக்கொள்கிறது.

இந்தியாவின் பெயர் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தனது குற்றங்களை பாகிஸ்தான் நிராகரித்து இந்தியாபற்றி பேசுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்களை தங்கள் சொந்த நாட்டை விட்டு விரட்டும் போக்கை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை வெளிப்படையாக செய்து வருகிறது. பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறார்கள். சங்கேத குறியீடுகள், மெய் நிகர் நாணயங்கள், டிரோன்கள் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பல புதிய இடங்களில் அவர்களின் தீய செயல்கள் அதிகரித்து வருகின்றன.

 


கொரோனா அச்சுறுத்தல் இந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தனித்திருத்தல், நிச்சயமற்ற பொருளாதாரம் போன்றவை உலகை மேலும் பாதிப்படைய செய்வதோடு பயங்கரவாத செயல்களும் அதிகரித்துள்ளன.

உலகின் ஒரு பகுதியில் உள்ள பயங்கரவாதத்தால் ஒட்டுமொத்த உலகத்துக்கும் அச்சுறுத்தல் உள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான போராட்டத்தில் எந்தவித விலக்கும் இன்றி அனைவரும் நடவடிக்கையில் இணைங்க வேண்டும்.

பயங்கரவாதிகளுக்கு நிதி உதவி செய்தல் தொடர்பான வழக்குகளில் தீர்வுகாண சட்டத்தை அமலாக்கும் முகமைகளுக்கு இந்தியா உடனுக்குடன் அதுதொடர்பான நிதிசார் தகவல்களை அளித்து வருகிறது.

‘சர்வதேச பயங்கரவாதம்’ என்ற தலைப்பில் நடத்தப்பட்ட முந்தைய கூட்டத்தின் வரைவு தீர்மானத்தின் அடிப்படையில் ஐ.நா. மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து நாடுகளும் இந்த முயற்சியில் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சரியான நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காதபட்சத்தில் அந்த நடவடிக்கை தோல்வி அடைந்ததாகவே நாங்கள் கருத வேண்டியுள்ளது.

முந்தைய சர்வதேச பயங்கரவாதம் தொடர்பான கருத் தரங்கின் தீர்மானத்தை செயல்படுத்தவும், பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டுவரவும் ஐ.நா. பொதுச்சபையில் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்ற ஒரு செயற்குழு அமைக்கப்படும் என இந்தியா நம்புகிறது.

இது உலக நாடுகளுக்கு மிக முக்கிய பணியாகும். கடந்த ஜூன் மாதம் ஐ.நா. பொதுச்சபையில் உலகளாவிய பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 7-வது அமர்வு தீர்மானத்தை இந்தியா வரவேற்கிறது. அத்துடன் பயங்கரவாதத்தை ஒழிக்க தேவையான நடவடிக்கை எடுப்பதற்கு உலக நாடுகள் பேச்சுவார்த்தைக்கு முன் வரும் என்று இந்தியா நம்புகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படியுங்கள்... உலக வெப்பமயம் அதிகரிக்க காரணமாக இருக்கும் டாப்-10 பெருநகரங்கள் பட்டியல் வெளியீடு

Tags:    

Similar News