செய்திகள்
கோப்புப்படம்

பீகாரில் முன்னணி மருத்துவமனைகளின் 500 டாக்டர்கள், ஊழியர்கள் கொரோனா 2-வது அலையில் சிக்கினர்

Published On 2021-04-22 22:19 GMT   |   Update On 2021-04-22 22:19 GMT
பீகாரில் எய்ம்ஸ், பாட்னா மருத்துவ கல்லூரி உள்ளிட்ட சில முன்னணி மருத்துவமனைகள் கொரோனா 2-வது அலைக்கு எதிராக போராடி வருகின்றன.
பாட்னா:

பீகாரில் எய்ம்ஸ், பாட்னா மருத்துவ கல்லூரி உள்ளிட்ட சில முன்னணி மருத்துவமனைகள் கொரோனா 2-வது அலைக்கு எதிராக போராடி வருகின்றன. இதுபோன்ற முன்னணி மருத்துவமனைகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள், சுகாதார ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இவர்களில் 384 பேர் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்களாவர். அதுபோல பாட்னா மருத்துவ கல்லூரியை சேர்ந்த 125 ஊழியர்களும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் 70 பேர் டாக்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாளந்தா மருத்துவ கல்லூரியிலும் கணிசமான மருத்துவ ஊழியர்கள் கொரோவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.



இந்த மருத்துவமனைகளின் கொரோனா வார்டுகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நோயாளிகளால் நிரம்பி வழிவதால், பாதிக்கப்பட்ட மருத்துவ ஊழியர்களுக்காக அதே மருத்துவமனையில் தனி வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார். டாக்டா்களும் மருத்து ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்படுவதால் நோயாளிகளை கவனிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அனைத்து மருத்துவர்கள், ஊழியர்களின் விடுப்புகள் ரத்து செய்யப்பட்டு பணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

புதன்கிழமை நிலவரப்படி பீகாரில் 12 ஆயிரத்து 222 பேர் கொரோனாவல் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் அங்கு 3 லட்சத்து 54 ஆயிரத்து 281 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 ஆயிரத்து 745 பேர் இப்போது சிகிச்சையில் உள்ளனர்.
Tags:    

Similar News