செய்திகள்
மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் குப்பைகளை எரிப்பதனால் புகை மூட்டம் ஏற்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

சிவகாசி ஒன்றியத்தில் பொது இடங்களில் எரிக்கப்படும் குப்பைகள் - விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

Published On 2021-02-19 12:11 GMT   |   Update On 2021-02-19 12:11 GMT
சிவகாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல பஞ்சாயத்து பகுதிகளில் பொது இடங்களில் குப்பைகளை கொட்டி எரிக்கும் சம்பவம் தொடரும் நிலையில் விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சிவகாசி:

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒன்றியங்களில் சிவகாசி ஒன்றியம் தான் பெரியது. இந்த ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் 3 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது.

சிவகாசி ஒன்றியத்தில் 54 பஞ்சாயத்துக்கள் உள்ளன. இதில் ஆனையூர், தேவர்குளம், எஸ்.என்.புரம், பள்ளப்பட்டி, விஸ்வநத்தம், நாரணாபுரம், சித்துராஜபுரம், சாமிநத்தம், அனுப்பன்குளம் ஆகிய பெரிய பஞ்சாயத்துக்களில் அதிக அளவில் மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் கொட்டவும், உரமாக தயாரிக்கவும் போதிய இடவசதி இல்லை.

இதனால் பெரும்பாலான இடங்களில் சேகரிக்கப்பட்ட குப்பை களை தூய்மை பணியாளர்களே தீயிட்டு எரிக்கும் நிலை தொடர்கிறது.

அதிலும் குறிப்பாக சிவகாசி நகராட்சியையொட்டி ஆனையூர், பள்ளப்பட்டி, எஸ்.என்.புரம், விஸ்வநத்தம், சித்துராஜபுரம் பஞ்சாயத்துகள் உள்ளன. நகராட்சி பகுதியில் தேவையான தூய்மை பணியாளர்கள் மற்றும் வாகன வசதி இருப்பதால் குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகிறது. அத்துடன் அப்புறப்படுத்தப்படும் குப்கைள் உரமாக மாற்றப்படுகிறது.

ஆனால் பஞ்சாயத்து பகுதியில் குப்பைகளை அகற்ற போதிய துப்புரவு தொழிலாளர்களும், வாகனங்களும் இல்லை என்று கூறப்படுகிறது.

இதனால் பல இடங்களில் குப்பைகள் மலைப்போல் தேங்கி நோய்களை பரப்பி வருகிறது. சில இடங்களில் குப்பைகளை துப்புரவு பணியாளர்களே தீயிட்டு எரிக்கும் நிலை இருக்கிறது. இவ்வாறு தீயிட்டு எரிக்கும் போது அதில் இருந்து வெளியேறும் புகையால் சாலையில் செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். குப்பைகள் எரிப்பது சிவகாசி ஒன்றியத்தில் தொடர்கிறது. இதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
Tags:    

Similar News