செய்திகள்

சுபிக்‌ஷா சுப்பிரமணியனின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி - ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-03-03 05:40 GMT   |   Update On 2018-03-03 05:40 GMT
தனது நிறுவனம் பெற்ற கடனுக்கு தான் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேல்நடவடிக்கை எடுக்க தடை கேட்டு ‘சுபிக்‌ஷா’ சுப்பிரமணியன் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை:

குஜராத், டெல்லி, மராட்டியம், தமிழகம் உள்பட நாடு முழுவதும் பல இடங்களில் ‘சுபிக்‌ஷா’ என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனம் செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.சுப்பிரமணியன்.

இவர், விஸ்வபிரியா பைனான்ஸ் சர்வீஸ் மற்றும் விஸ்வபிரியா பைனான்ஸ் செக்யூரிட்டி என்ற பெயரில் நிதி நிறுவனங்களை நடத்தினார். இந்த நிறுவனங்களின் பெயரில், பொதுமக்களிடம் இருந்து சுமார் ரூ.150 கோடி வரை முதலீடு பெற்று மோசடி செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில், சுபிக்‌ஷா சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்காக வங்கிகளில் சுமார் ரூ.700 கோடி கடன் வாங்கி மோசடி செய்தாக சுப்பிரமணியன் மீது, மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கடந்த புதன்கிழமை அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

இந்தநிலையில், வங்கியில் வாங்கிய கடனுக்கு தான் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்க தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

‘சுபிக்‌ஷா’ நிறுவனத்துக்கு ‘எச்.எஸ்.பி.சி.’ வங்கியிடம் சுப்பிரமணியன் கடன் வாங்கியுள்ளார். இந்த கடனுக்கு சுப்பிரமணியன் உத்தரவாதமும் கொடுத்துள்ளார். இதற்காக கடந்த 2005, 2006 மற்றும் 2007-ம் ஆண்டுகளில் பல உத்தரவாதங்களை, வங்கிக்கு கொடுத்துள்ளார்.

இந்த உத்தரவாதங்களை வங்கி நிர்வாகம் சட்டப்படி, முறையாக வாங்கவில்லை என்றும் இந்த உத்தரவாதங்கள் செல்லாது என்றும் இந்த உத்தரவாதத்தின் அடிப்படையில், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க எச்.எஸ்.பி.சி. வங்கி நிர்வாகத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘கடன் வாங்கியது தொடர்பாக, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே, இந்த கோரிக்கையை தீர்ப்பாயத்தில் முன்வைக்கலாம். மனுதாரர் அங்கு சென்று முறையிடலாம்’ என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சுப்பிரமணியன் மேல்முறையீடு செய்தார்.

இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.வேணுகோபால், எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் விசாரித்தனர். பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

‘சுபிக்‌ஷா’ நிறுவனம் பெயரில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தாததால், அந்த நிறுவனம் மீது கடன் வசூல் தீர்ப்பாயத்தில் எச்.எஸ்.பி.சி. வங்கி வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த கடனுக்கு மனுதாரர் சுப்பிரமணியன் உத்தரவாதம் அளித்துள்ளார். எனவே, கடனை திருப்பித் தரவில்லை என்றால், கடன் வாங்கியவர் மட்டுமல்லாமல், உத்தரவாதம் அளித்தவரும், அந்த கடனுக்கு பொறுப்பாவார்கள். இதுமட்டுமல்லாமல், சுபிக்‌ஷா நிறுவனத்துக்கு சுப்பிரமணியன் கடன் உத்தரவாதம் மட்டும் கொடுக்கவில்லை, அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இவர் தான்.

தற்போது, ரூ.98 கோடியே 47 லட்சம் கேட்டு, கடன் வசூல் தீர்ப்பாயத்தில் வங்கி நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. எனவே, மனுதாரர் கோரிக்கையை விசாரிக்கும் அதிகாரம் கடன் வசூல் தீர்ப்பாயத்திடம் தான் உள்ளது.

மேலும், மனுதாரர் சுபிக்‌ஷா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் என்ற பதவியின் அடிப்படையில் வழக்கு தொடராமல், தனிநபர் என்று குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதன்மூலமே அவரது நோக்கம் தெளிவாக தெரிகிறது.

எனவே, இவரது வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ஏற்றுக் கொள்கிறோம். இந்த மேல்முறையீட்டு வழக்கை, தள்ளுபடி செய்கிறோம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.  #tamilnews
Tags:    

Similar News