செய்திகள்

அத்திவரதர் விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பள்ளிகள் நேரம் குறைப்பு

Published On 2019-06-24 03:44 GMT   |   Update On 2019-06-24 03:44 GMT
வரதராஜபெருமாள் கோவிலில் நடைபெற உள்ள அத்திவரதர் விழாவையொட்டி, காஞ்சிபுரம் நகரில் உள்ள பள்ளிகளின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.
சென்னை:

காஞ்சிபுரத்தில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா நேற்று இரவு நிருபர்களிடம் கூறியதாவது:-

காஞ்சிபுரம் வரதராஜபெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை நடைபெறும். விழாவையொட்டி ஜூலை 1-ந் தேதி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசனத்திற்காக கிழக்கு கோபுரம் வழியாக கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படுவர். மேற்கு (முன்)கோபுரம் வழியாக வெளியே செல்வார்கள்.

பக்தர்கள் இலவச தரிசனம் செய்யலாம். மேலும் சிறப்பு நுழைவு கட்டணம் ரூ.50 மற்றும் ஆன்லைனில் ரூ.500-க்கான சிறப்பு நுழைவு கட்டணம் பதிவு செய்துகொள்ளலாம். ஆன்-லைனில் ஒரு நாளைக்கு 500 பேர் மட்டுமே இந்த சிறப்பு டிக்கெட்டை பெற்றுக்கொள்ள முடியும்.

விழா நடைபெறும் ஜூலை 1-ந் தேதி முதல் ஆகஸ்டு 17-ந் தேதி வரை காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் செயல்படும் நேரம் குறைக்கப்படுகிறது. அதன்படி பள்ளிகள் காலை 8.30 மணி முதல் பகல் 1.30 மணி வரை மட்டுமே செயல்படும். மதியம் விடுமுறை அளிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை தவிர்க்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

இதுதவிர காஞ்சிபுரம் நகரில் ஒலிமுகமதுபேட்டை, பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி, ஓரிக்கை ஆகிய 3 இடங்களில் இருந்து அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படும். கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் இந்த பஸ்களில் ரூ.10 கட்டணத்தில் வரதராஜபெருமாள் கோவில் அருகே வரை செல்லலாம்.

அத்திவரதர் விழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பாதுகாப்புக்காக 2,500 போலீசார் வரவழைக்கப்படுகின்றனர். மேலும் காஞ்சிபுரம் நகரின் 45 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, தங்கச்சங்கிலி பறிப்பு, வழிப்பறி ஆகியவற்றை தடுக்கும் வகையில் போலீசார் கண்காணிப்பார்கள்.

பக்தர்களுக்கு பாதுகாப்பான குடிநீர், கழிவறைகள், சுகாதார வசதிகள் செய்துகொடுக்க மாவட்ட நிர்வாகமும், அறநிலையத்துறையும், நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவிலில் கோடை உற்சவம், ஆனி கருடசேவை, ஆடிப்பூரம், உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும்.

முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிலில் 6 பேட்டரி கார்கள் மற்றும் 3 சக்கர சைக்கிள்கள் தயார் நிலையில் வைக்கப்படும். அத்திவரதரை பார்க்க வரும் பக்தர்கள் எளிய முறையில் தரிசிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
Tags:    

Similar News