செய்திகள்
சரத்குமார்

கொடநாடு வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தி மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் - சரத்குமார்

Published On 2021-09-09 14:34 GMT   |   Update On 2021-09-09 14:34 GMT
ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். அதுகுறித்தும் முதல்வர் பதில் அளிக்கவேண்டும் என சரத்குமார் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத்தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று திண்டுக்கல்லில் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். அதன்பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது,

தி.மு.க ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து தற்போது எதுவும் கூற இயலாது. 6 மாதம் முடிந்தபிறகுதான் இந்த ஆட்சியின் குறைகள் குறித்து கருத்து தெரிவிக்கமுடியும். மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்கள் மற்றும் குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்த சட்டத்தில் உள்ள குறைகளை மத்திய அரசுக்கு தமிழக அரசு தெரிவிக்கவேண்டும். அதேபோல் மத்திய அரசும் மாநில அரசு தெரிவிக்கும் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யும் வகையில் செவிசாய்க்க வேண்டும்.

கொடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய மக்கள் அனைவரும் ஆவலாக உள்ளனர். இதில் விசாரணைக்கு அழைக்கும்போது பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யார் மீதெல்லாம் சந்தேகம் எழுகிறதோ அவர்களை அழைத்து விசாரணை நடத்தவேண்டும். இவ்வழக்கு விசாரணையை நேர்மையாக நடத்தி நடந்த உண்மை சம்பவங்களை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

இதேபோல் ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மங்கள் குறித்து விசாரிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்திருந்தார். அதுகுறித்தும் முதல்வர் பதில் அளிக்கவேண்டும்.


உள்ளாட்சி தேர்தல் என்பது மக்களுக்காக சேவை செய்யக்கூடிய பணியாகும். மக்களுடன் நேரடிதொடர்பில் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்பார்கள். எனவே இதில் தேர்தலில் கூட்டணி அமைத்துதான் போட்டியிட வேண்டிய அவசியம் இல்லை. உள்ளாட்சி தேர்தலில் சமத்துவமக்கள் கட்சி நிர்வாகிகள் போட்டியிட ஆர்வமாக உள்ளனர். மக்களுக்காக சேவை செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் தேர்தலில் போட்டியிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படியுங்கள்...எல்லை அருகே இறங்குதளம்... தேசிய நெடுஞ்சாலையில் விமானப்படை விமானங்களை தரையிறக்கி ஒத்திகை

Tags:    

Similar News