செய்திகள்
போகி பண்டிகை

போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்

Published On 2020-01-13 03:22 GMT   |   Update On 2020-01-13 03:22 GMT
போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்கள் என விமான நிலைய ஆணையகம் வேண்டுகோள் விடுத்து உள்ளது.
ஆலந்தூர்:

போகி பண்டிகை நாளை(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. அப்போது கழிவு மற்றும் பழைய பொருட்களை தீ வைத்து கொளுத்துவது வழக்கம். இதனால் சென்னை நகர் முழுவதும் புகை மூட்டமாக காணப்படும்.

சென்னை விமான நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகாலை நேரத்தில் இதுபோன்று எரிக்கப்படும் பொருட்களால் உண்டாகும் புகை காரணமாக ஆண்டுதோறும் விமான சேவை பாதிக்கப்பட்டு வருகிறது.



இந்தநிலையில் போகி பண்டிகை அன்று அதிக புகையை வெளிப்படுத்தும் பொருட்களை எரிக்காதீர்கள் என்று விமான நிலைய ஆணையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

2018-ம் ஆண்டு போகி பண்டிக்கையின்போது கழிவு மற்றும் பழைய பொருட்களை கொளுத்தியதால் விமான போக்குவரத்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் 73 விமானங்கள் புறப்படுவதிலும், 45 விமானங்கள் தரை இறங்குவதிலும் பாதிப்பு ஏற்பட்டது. பல விமானங்கள் திருப்பி விடப்பட்டன. கடந்த ஆண்டும் விமான சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே இந்த ஆண்டு விமான சேவை பாதிப்பு ஏற்படாத வகையிலும், பயணிகள் பாதிக்காத வகையிலும் சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகமான புகையை வெளிப்படுத்தும் கழிவு மற்றும் பழைய பொருட்களை எரிக்க வேண்டாம். இதனால் தடையின்றி விமான சேவை நடைபெறும். மீனம்பாக்கம் விமான நிலையத்தை சுற்றியுள்ள மக்கள் விமான சேவை பாதிப்பின்றி செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News