வழிபாடு
ஐயப்பன்

கலாசிபாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை நாளை நடக்கிறது

Published On 2021-12-24 06:11 GMT   |   Update On 2021-12-24 06:11 GMT
கலாசிபாளையாவில் உள்ள ஐயப்பன் கோவிலில் அடுத்த மாதம்(ஜனவரி) 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ மூர்த்திக்கு அவர்களே நெய் அபிஷேகம் செய்யலாம்.
பெங்களூரு கலாசிபாளையா மெயின் ரோட்டில் ஐயப்ப சாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நாளை (25-ந் தேதி) 77-வது ஆண்டு மண்டல பூஜை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி அன்றைய தினம் காலை 5 மணி முதல் தொடர்ந்து ஐயப்பனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற உள்ளன. பஞ்சாமிர்த அபிஷேகம், விசேஷ அலங்காரம், மகா மங்கள ஆரத்தி, சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.

மாலை 5 மணிக்கு ஐயப்பனுக்கு பாலாபிஷேகமும், அதைத்தொடர்ந்து ஐயப்பனின் பல்லக்கு ஊர்வலமும் நடைபெறும். ஊர்வலத்தில் சுமங்கலி பெண்கள் கைகளில் விளக்குகளை ஏற்றி முன்னே நடந்து செல்ல பின்னே ஐயப்பன் பல்லக்கில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்காட்சி தந்தபடி வலம் வருவார். இதில் பங்கேற்கும் பெண்கள் தட்டுகளை மட்டும் எடுத்து வந்தால் போதும் என்றும், பூஜை பொருட்களை கோவில் நிர்வாகம் வழங்கும் என்றும் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். பின்னர் ஐயப்பனுக்கு விசேஷ பூஜை செய்யப்பட்டு, மகா மங்கள ஆரத்தி காட்டப்படும். அதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும்.

மேலும் அடுத்த மாதம்(ஜனவரி) 14-ந் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. இதற்காக காலை 5 மணி முதல் மதியம் 2 மணி வரை ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் நடைபெற உள்ளது. பின்னர் இரவு 6.45 மணிக்கு கோவில் முன்பு உள்ள மணிகண்ட மண்டபத்தில் மகர ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ மூர்த்திக்கு அவர்களே நெய் அபிஷேகம் செய்யலாம்.

இதற்கான ஏற்பாடுகளை குருசாமி குமாரசாமி செய்து வருகிறார்.
Tags:    

Similar News