லைஃப்ஸ்டைல்
தாய் மகள் அன்பு

பெண் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய பெரிய சீதனம்

Published On 2020-05-20 04:58 GMT   |   Update On 2020-05-20 04:58 GMT
எப்பாடுபட்டேனும் கல்வியை அளிப்பதே பெற்றோர் பெண்குழந்தைக்கு கொடுக்கும் பெரிய சீதனம் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமே பெண் குழந்தைகளுக்கு அரணாக அமைய முடியும் என்பதையும் உணர வேண்டும்.
அறிவியல், தொழில்நுட்பம் என அனைத்திலும் முன்னேற்றம் அடைந் துள்ள இந்த 21ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில்தான் பல மூட நம் பிக்கைகளையும் விடாமல் பிடித்துக் கொண்டிருக்கிறோம். நம்பிக்கைகள் என்பது நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடியதாகவோ அல்லது குறைந்தபட்சம் அன்றாட வாழ்வியலில் நிம்மதியைத் தரக்கூடியதாகவோ இருக்க வேண்டும். அப்படி இல்லாத ஒன்றை மூட நம்பிக்கை என்றே தள்ள வேண்டியுள்ளது.

சோதிடம் என்பது நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலை, மக்களின் மீதும் நிகழ்வுகளின் மீதும்நேரடியான பாதிப்பை ஏற்படுத்துவதாக நம்பப்படும் ஒரு பழமையான நடைமுறை.ஒருவரின் பிறப்பின் போது உள்ள நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் நிலைக்கு ஏற்ற வாறு ஒருவரின் வாழ்க்கைப் பயணம் தீர் மானிக்கப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இதனை விளக்கும் வரைபடத்தை சாதகம் என்கிறார்கள்.

பெரும்பாலான குடும்பங்களில் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், பிறந்த குழந்தைக்கு பெயர் வைப்பது போன்ற முக்கியமான எதிர்கால முடிவுகளையும் எடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது சோதிடம்,  சாதகம் போன்ற வைகளே.

அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல பல நேரங்களில் இவைகள் தலையெழுத்தையே மாற்றக் கூடியதாகஅமைந்துவிடுவதைத் தவிர்க்க முடிவதில்லை. குறிப்பாக ஒருவரின் பிறந்த நேரத்தை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படும் சோதிடம், தாயின் வயிற்றி லிருந்து குழந்தையின் தலை வெளியில் வரும் அந்த நொடிப்பொழுதை வைத்தே கணக்கிடப்படுகிறது. ஆனால் இந்த நேரத்தை அத்தணைத்துல்லியமாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்களா என்ப தும் கேள்விக்குறிதான்.

அன்புச்செல்வி சுயவிருப்பு வெறுப்பு என்பதெல்லாம் அறிந்திராத, பெரியோர் சொல் வேதவாக்கு என்று வாழ்ந்திருக்கும் பாரம்பரியமான குடும்பத்தின் வழிவந்த ஒரு சராசரி இந்தியப்பெண். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்ற,படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவுடன் வாழ்ந்தவள். ஆனால் வாழ்வில் நடந்ததோ வேறு.

அவளுடைய சாதகக் கட்டங்கள் சிலபல தோசங்களைக் காட்டி அச்சமூட்ட, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம் என்பதனால் எல்லாம் கூடி வந்து, உறவு வகையில் நல்ல வரன் வரவும், திருமண ஏற்பாடு செய்த மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவு களைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகுஇரண்டாவது குழந்தை பிறக்கும் வரை, வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது.பரம்பரையாக நெசவுத் தொழில் செய்யும் நல்ல வசதி யான குடும்பம்.நவீன இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர தொழில் சிறப்பாகவே நடந்தது.

ஆயினும் காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டதில், சோதிடம், சாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான் அன்புச்செல்வி இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தன.

குடும்ப அமைதிக்கு என்ற பெயரில் அனைத்து விதமான பரி காரங்களும் செய்யத் தயாராகி விட்டனர்.அன்புச்செல்வியின் விதியும் விளையாட ஆரம்பித்தது. குடும்ப சோதிடர் குலதெய்வ வழிபாடு, அன்னதானம் என அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டையும் தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், அன்புச்செல்வியின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்! வியாபாரம் நொடித்துப் போனதற்கு அதுவும் ஒரு காரணம் என்றிருக்கிறார். அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து அன்புச்செல்வியின் வயிற்றில் வளரும் கருவை அழித்து விடுவது என்று முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றிருக்கிறார்கள்.அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லிதிருப்பி அனுப்பிவிட்டனர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தன. அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடை பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தியதுடன் அன்புச்செல்வியின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனஉளைச்சலுக்குஆளாகியிருந்தாள். விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது. பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்த தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்கலம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள்.

அங்கேயும் அவளுக்குப் பிரச்சினை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிகூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று  கட்டாயப்படுத்தி கணவன் வீட்டிற்கேஅனுப்பிவிட்டார்கள்.

பிரச்சினை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும் மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலும் இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, அந்த அழகான பெண் குழந்தையை இழக்கவும் முடியாமல் அந்தத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்ற குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்த்தே எடுத்துவிட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன.
மூடநம்பிக்கையே இதற்குக் காரணம் என்றாலும்,பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகளுடன் வளர்ப்பது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவர்களுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சினைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் ஆற்றலையும் ஊட்டி வளர்த்திருக்க வேண்டாமா?

நட்சத்திர மண்டலங்களின் நகர்வுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் சோதிட கணிப்புகள் நமது சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான சோதிட வரைபடங்கள் நமது சூரிய மண்டலத்தில்   ஏழு கிரகங்கள் உள்ளன என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டவை. ஆரம்ப காலங்களில் யுரேனசு, நெப்டியூன்,புளூட்டோ ஆகிய கிரகங்கள்  கண்களால் காண முடியாதவைகளாக இருந்ததன் விளைவாக, சோதிடர்கள், பூமியைச் சுற்றி வருவதாக தாங்கள் நம்பிய ஏழு கிரகங்கள் மீது தங்கள் அமைப்பை அடிப்படையாகக் கொண்டனர். ஆனால் அதன் நடத்தையின் மீது அவைகள் தாக்கத்தை ஏற்படுத்துவதால், துல்லியமாக ஒரு சாதகத்தைக் கணிக்க மற்ற மூன்று கிரகங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றாகிறது. அந்த வகையில் இந்த மூன்று கிரகங்கள் கருத்தில் கொள்ளப்படாததால், சோதிடக் கோட்பாட்டில் பிழை உள்ளதாகவும், அனைத்து கிரகங்களையும் கருத்தில் கொள்ளாமல் துல்லியமான சாதகம் கணிக்கவும்  இயலாது என்றும் அறிவியலாளர்கள் கருதுவதையும் புறந்தள்ள இயலாது.

எது எப்படியோ, ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்க ஆரம்பிக்கும் பெற்றோர்கள் அவளுடைய சுயவலிமையையும், தன்னம்பிக்கையையும் மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறார்கள். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ள அவகாசம் அளிக்கப்பட வேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சினைகளைப் பகுத்தறிந்து பார்க்கவும், தேவைப்பட்டால் எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். எப்பாடுபட்டேனும் அப்படிப்பட்ட கல்வியை அளிப்பதே பெற்றோர் பெண்குழந்தைக்கு கொடுக்கும் பெரிய சீதனம் என்பதில் ஐயமில்லை. அது மட்டுமே பெண் குழந்தைகளுக்கு அரணாக அமைய முடியும் என்பதையும் உணர வேண்டும்.
Tags:    

Similar News