ஆன்மிகம்
வெள்ளீஸ்வரர் திருக்கோவில்

கண் நோய் நீங்க வழிபட வேண்டிய தலம்

Published On 2021-03-16 03:49 GMT   |   Update On 2021-03-16 03:49 GMT
இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் வெள்ளீஸ்வரர் திருக்கோவில். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
மயிலாப்பூரில் பிரசித்திப்பெற்ற கபாலீஸ்வரர் கோவிலின் அருகிலேயே, வெள்ளீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. சிவனுக்கும், காமாட்சி அம்மனுக்கும் உரித்தான ஆலயமாக இது கருதப்படுகிறது. சப்த ரிஷிகளில் ஒருவரான ஆங்கீரச முனிவர் வழிபட்ட தலம் இது. மகாவிஷ்ணு, வாமனராக அவதரித்தபோது, மகாபலி நடத்திய யாகத்தில் யாசகம் கேட்டுச் சென்றார்.

அவர் ‘தன் பாதங்கள் அளப்பது வரையான மூன்று அடி மண் வேண்டும்’ என்று கேட்டார். அதைத் தருவதாக மகாபாலியும் ஒப்புக்கொண்டார். ஆனால் மகாபலியின் அசுர குருவான சுக்ராச்சாரியார், வந்திருப்பது மகாவிஷ்ணு என்பதை உணர்ந்து மகாபலியை தடுத்தார். ஆனாலும் கமண்டல நீர் கொண்டு நிலத்தை தாரை வார்க்க முன்வந்தார், மகாபலி.

உடனே சுக்ராச்சாரியார், வண்டாக உருவெடுத்து, கமண்டல நீர் வரும் பாதையை தடுத்தார். இதை அறிந்த வாமனர், தர்ப்பை புல்லை எடுத்து நீர் வரும் பாதையில் குத்தினார். அதில் தர்ப்பைப் புல் குத்தி, வண்டின் கண் பார்வை பறிபோனது. இழந்த பார்வையை திரும்ப பெறுவதற்காக சுக்ராச்சாரியர், வழிபட்ட தலம் இதுவாகும். சுக்ரனுக்கு ‘வெள்ளி’ என்ற பெயரும் உண்டு.

இதனால் இத்தல இறைவன் ‘வெள்ளீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வழிபட்டால், கண் நோய் நீங்கும் என்பது ஐதீகம்.
Tags:    

Similar News