செய்திகள்
பிசிசிஐ

உள்நாட்டு வீரர்களுக்கு போட்டி கட்டணம் உயர்வு- இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு

Published On 2021-09-21 05:20 GMT   |   Update On 2021-09-21 05:20 GMT
23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது.
புதுடெல்லி:

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு முதல்முறையாக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் உள்நாட்டு போட்டிகளில் விளையாடும் வீரர்கள் பாதிப்படைந்தனர்.

கடந்த 2019-20-ம் ஆண்டுக்கான உள்ளூர் சீசனில் விளையாடிய வீரர்களுக்கு இந்த சீசனில் கூடுதலாக 50 சதவீத கட்டணம் இழப்பீடாக வழங்கப்படும். அத்துடன் அடுத்த சீசனில் இருந்து உள்ளூர் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான போட்டி கட்டணம் அதிகரிக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய்ஷா ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்து இருக்கிறார்.

இந்திய கிரிக்கெட் வாரிய உயர்மட்ட கமிட்டி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதன்படி 40 ரஞ்சி போட்டிக்கு மேல் விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டு இனிமேல் ரூ.60 ஆயிரம் கிடைக்கும். இதன்படி ஒரு முதல்தர போட்டிக்கு மொத்தம் ரூ.2.40 லட்சம் ஊதியமாக பெற முடியும். 21 முதல் 40 போட்டிகள் வரை விளையாடிய வீரர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. 20-க்கும் குறைவான போட்டியில் ஆடியவர்களுக்கு தினசரி போட்டி கட்டணம் ரூ.40 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

23 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.25 ஆயிரமாகவும், 19 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.20 ஆயிரமாகவும், 16 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு ரூ.7 ஆயிரமாகவும் தினசரி போட்டி கட்டணம் உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பயன் அடைவார்கள்.
Tags:    

Similar News