லைஃப்ஸ்டைல்
இனி எல்லாமே ஆன்லைன் தான்

இனி எல்லாமே ஆன்லைன் தான்

Published On 2021-09-02 08:28 GMT   |   Update On 2021-09-02 08:28 GMT
ஆன்லைன் நேர்காணலுக்கு நீங்கள் தயாராகும்போதே, எங்கு அமர்ந்து நேர்காணலை எதிர்கொள்ளலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.
‘‘முன்பெல்லாம், வேலைவாய்ப்பு குறித்த செய்திகளை செய்தித்தாள்களில் தேடி படிப்போம். அதில் நமக்கு ஏற்ற அழைப்பு இருந்தால், அந்த நேர்காணலுக்கு தயாராவோம். ‘ரெஸ்யூம்’ பிரிண்ட் எடுப்பது, நண்பர்களிடமிருந்து ஷூ மற்றும் டை, கடன் வாங்கி வைப்பது, டிப்-டாப் ஆக உடை அணிந்து அலுங்காமல் குலுங்காமல் பேருந்தில் ஏறி, இலக்கை அடைவது.... என ஏகப்பட்ட பிரச்சினைகளை கடந்துதான், நேர்காணல் நடைபெறும் இடத்தையே அடைவோம்.

அங்கு நமக்கு முன்பாகவே பெருங்கூட்டம், அந்த நேர்காணலுக்காக வந்திருக்கும். அதையும் கடந்து, நமக்கான நேரம் வரும்போது, நேர்காணல் நடத்துபவரை இம்பிரஸ் செய்வதெல்லாம், தனிக்கலை. ஆனால் இன்று நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. வேலை அறிவிப்பில் தொடங்கி, நேர்காணல் வரை எல்லாமே ஆன்லைனில் வந்துவிட்டது. ஏன்...? பணிபுரிவதும் ஆன்லைனில்தான்’’ என்ற முதல் கருத்திலேயே ஆச்சரியப்படுத்துகிறார், கோவையை சேர்ந்த வசந்த். மனிதவளத்துறையில் அதீத அனுபவம் உள்ளவரான இவர், ஆன்லைன் நேர்காணல் மற்றும் அதற்கான தயாரிப்புகள் பற்றி பகிர்ந்து கொள்கிறார். குறிப்பாக ஆன்லைன் நேர்காணலில், இளைஞர்கள் எப்படி சொதப்புகிறார்கள் என்பதை விளக்குகிறார்.

‘‘நேர்காணலுக்கு என எழுதப்பட்டிருந்த, கடைப்பிடிக்கப்பட்டிருந்த எல்லா பார்முலாக்களையும், ஆன்லைன் நேர்காணல் உடைத்துவிட்டது. அதனால் இளைஞர்கள் ஒருசில விஷயங்களில் தடுமாறுகிறார்கள். குறிப்பாக ஆன்லைன் நேர்காணல் நடைபெறும்போது, இருட்டு அறைக்குள் அமர்ந்திருந்து பதிலளிப்பது பெரும்பாலானோரின் பணி வாய்ப்பை நிராகரித்துவிடுகிறது. அதனால் ஆன்லைன் நேர்காணலுக்கு நீங்கள் தயாராகும்போதே, எங்கு அமர்ந்து நேர்காணலை எதிர்கொள்ளலாம் என்பதையும் திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

‘‘உங்களது அறையும், முகமும் பிரகாசமாகும்போது, உங்களுடைய பணிவாய்ப்பும் பிரகாசமாகிறது’’ என்று பொறுப்பாய் ஆலோசனை வழங்கும் வசந்த், வழக்கமான நேர்காணலை போன்றே, நவ-நாகரிக உடை அணிந்து ஆன்லைன் நேர்காணலை எதிர்கொள்ள அறிவுறுத்துகிறார்.

‘‘ஆன்லைன் தானே என அலட்சியம் காட்டாமல் நல்ல உடை அணிந்து அமருங்கள். முடிந்தால் கோட்-சூட் அணிந்து நேர்காணலை எதிர்கொள்வது உங்களுக்கு கூடுதல் மதிப்பையும், மதிப்பெண்ணையும் பெற்றுக்கொடுக்கும். கேமராவை ஆன் செய்ததும் மலர்ந்த சிரிப்புடன் ‘ஹலோ/வணக்கம்’ சொல்லுங்கள். முகத்திலும், உடல் அசைவிலும் நம்பிக்கையை வெளிப்படுத்துங் கள்.. நேராக நிமிர்ந்து அமர்ந்தபடி பேசுங்கள்.

ஆன்லைன் என்பதால் சில நேரங்களில் நாம் பேசுவது அல்லது அவர்கள் பேசுவது சிறிது நேரம் கழித்து கேட்கலாம். எனவே பதில் அளிக்கவோ, அவர்கள் பேசுவதை கவனிப்பதிலோ பொறுமை அவசியம். அவர்கள் முழுமையாக பேசி முடித்த பின்பு, நன்கு கேட்டுவிட்டு உங்கள் பதிலை தர தயாராகுங்கள். முன்கூட்டியே வாய் திறக்க வேண்டாம். முடிக்கும்போதும் சிரித்த முகத்துடன் நிறைவு செய்யுங்கள்’’ என்றவர், ஆன்லைன் நேர்காணலுக்கு சுயபரிசோதனை அவசியம் என்றார்.

‘‘ஆன்லைன் இண்டர்வியூ புதிது என்பதால் முன் கூட்டியே என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும், அறிமுகம் எப்படி செய்ய வேண்டும் என்பதை திட்டமிட்டுக்கொள்ளுங்கள். கேமராவில் நீங்களே பேசி ரெக்கார்ட் செய்து ஒரு முறை கேட்டுப்பாருங்கள். ஆன்லைன் என்பதால் நோட்டில் குறிப்பு கூட எழுதி வைத்துக்கொண்டு அமரலாம்’’ என்று ஆன்லைன் நேர்காணலுக்கான தயாரிப்புகளை விளக்கிய வசந்த், ‘‘நேர்காணலுக்கு முன் இணைய வசதி, சிக்னல் சிறப்பாக இருக்கிறதா, ஆடியோ, லேப்டாப் கேமரா, மைக்ரோபோன் நன்கு வேலை செய்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்’’ என்ற கருத்தோடு விடைபெற்றார்.
Tags:    

Similar News