செய்திகள்
மின்னணு எந்திரங்களை கொண்டு செல்லும் லாரிகள்

10 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணு எந்திரங்களை கொண்டு செல்ல 353 லாரிகள்

Published On 2021-04-05 02:06 GMT   |   Update On 2021-04-05 02:06 GMT
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவை யான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கொண்டு செல்லும் லாரிகளை ஜி.பி.எஸ். கருவிகள் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவை

தமிழகத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்காக கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 4,427 வாக்குச்சாவடிகளுக்கு தேவையான மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் கொண்டு செல்வதற் கான லாரிகள் நேற்றுக்காலை கோவை போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்துக்கு கொண்டு வரப்பட்டன.கோவை மாநகருக்கு உட்பட்ட கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், தொண்டாமுத்தூர் ஆகிய தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு செல்ல 123 லாரிகளும், மற்ற 6 தொகுதிகளுக்குட்பட்ட வாக்குச்சாவடி களுக்கு கொண்டு செல்ல 230 லாரிகள் என மொத்தம் 353 லாரிகள் பி.ஆர்.எஸ். மைதானத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

பின்னர் லாரிகளின் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அந்த லாரிகள் அனைத்திற்கும் வாகனங்கள் எங்கு செல்கிறது என்பதை கண்டுபிடிக்க உதவும் ஜி.பி.எஸ். கருவிகள் தேர்தல் கமிஷன் சார்பில் பொருத்தப்பட் டன. அதன்பின்னர் அந்த லாரிகள் சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்து அனுப்பப்பட்டன. இது தவிர மண்டல தேர்தல் அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 339 கார்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இது குறித்து போலீஸ் அதிகாரி கூறியதாவது:-

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேவையான 353 லாரிகள் ஒவ்வொன்றிலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 3 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். அந்த லாரிகள் நேற்றுக் காலையிலேயே கோவையில் இருந்து புறப்பட்டு அந்தந்த தொகுதிகளுக்கு சென்று சேர்ந்து விட்டன. அந்த லாரிகளின் முன்பக்க கண்ணாடியில் ஒரு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது. அது பார்கோடு ஸ்டிக்கர் ஆகும். அதில் வாக்குச்சாவடி எண் எழுதப்பட்டிருக்கும்.

அந்த வாக்குச்சாவடிக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மட்டுமே அந்த லாரியில் ஏற்ற வேண்டும். அந்த லாரியில் சரியான வாக்குப்பதிவு எந்திரங்கள் தான் ஏற்றப்பட்டுள்ளனவா என்று சரிபார்ப்பதற்காக லாரியின் கண்ணாடியில் ஒட்டப்பட்டுள்ள பார் கோடு ஸ்டிக்கரையும், லாரியில் ஏற்றப்பட்ட மின்னணு எந்திரங்களின் பெட்டி மீது ஒட்டுப்பட்டுள்ள பார்கோடு ஸ்டிக்கரையும் ஸ்கேன் செய்து சரியான எண் உள்ள எந்திரங்கள் தான் ஏற்றப்பட்டுள்ளன என்று தேர்தல் அதிகாரிகள் சரிபார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மற்ற வாக்குச்சாவடிக்கான எந்திரங்களை அந்த லாரியில் ஏற்ற முடியாது.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் இன்று (திங்கட்கிழமை) காலையில் லாரியில் ஏற்றப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லப்படும். கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து தொகுதியின் பாதுகாப்பு அறைக்கு செல்லும் போதும், அங்கிருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை ஏற்றிக் கொண்டு வாக்குச்சாவடிகளுக்கு செல்லும் போதும், வாக்குப்பதிவு முடிந்து கோவை ஜி.சி.டி. கல்லூரிக்கு திரும்பும் போதும் போலீசார் எந்த பாதையில் சொல்கிறார்களோ அந்த குறிப்பிட்ட பாதையில் தான் லாரிகள் செல்ல வேண்டும். வேறு பாதையில் செல்லக்கூடாது. மின்னணு எந்திரங்கள் ஏற்றிய லாரிகள் எங்கெங்கு செல்கின்றன என்று கோவை மாவட்ட கலெக்டர் அறையில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தவாறு கண்காணிக்க முடியும். எனவே லாரிகள் வேறு பாதையில் சென்றால் அதை ஜி.பி.எஸ். கருவி காட்டிக் கொடுத்து விடும்.

வாக்குச்சாவடிக்கு மின்னணு எந்திரங்களை கொண்டு செல்லும் போது 4 போலீசார் மற்றும் தேர்தல் பிரிவு ஊழியர்கள் இருப்பார்கள். ஆனால் ஓட்டுப்பதிவு முடிந்து எந்திரங்களை ஓட்டு எண்ணும் மையத்துக்கு கொண்டு செல்லும் போது அந்த லாரியில் கூடுதல் போலீசார் இருப்பார்கள்.

எனவே வாக்குப் பதிவு எந்திரங்கள் அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News