செய்திகள்
கொரோனா வைரஸ்

நர்சிங் கல்லூரியில் 46 மாணவிகளுக்கு கொரோனா

Published On 2021-09-16 04:12 GMT   |   Update On 2021-09-16 04:12 GMT
கோவை மாநகராட்சி சார்பில் கே.ஜி. நர்சிங் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
கோவை:

கோவையில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் மாணவ-மாணவிகள் கண்டிப்பாக 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் அல்லது அவர்கள் கொரோனா பரிசோதனை செய்திருக்க வேண்டும் என்று கோவை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் வெளி மாநில மாணவ-மாணவிகளை ஒரு வாரம் தனிமைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதற்கான கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோவை சரவணம்பட்டியில் உள்ள கே.ஜி.நர்சிங் கல்லூரியில் கோவை மற்றும் கேரளாவை சேர்ந்த மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இதில் நர்சிங் படிக்கும் மாணவிகள் 46 பேருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த கல்லூரி மூடப்பட்டது. இதனை தொடர்ந்து கல்லூரியில் கிருமிநாசினி தெளிக்கும் பணி நடந்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த நர்சிங் கல்லூரியில் கேராளவை சேர்ந்த மாணவிகளை தனிமைப்படுத்தாமல், பிற மாணவிகளுடன் ஒரே வகுப்பறையில் ஒன்றாக அமர வைத்துள்ளனர். இதனால் அந்த மாணவிகள் மூலம் பிற மாணவிகளுக்கு கொரோனா தொற்று பரவியது தெரியவந்தது.

இதையடுத்து கோவை மாநகராட்சி சார்பில் கே.ஜி. நர்சிங் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, விளக்கம் கேட்டு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் எதிரொலியாக பிற மாநிலங்களில் இருந்து கோவைக்கு வரும் மாணவ-மாணவிகளை ஒரு வாரம் தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனை செய்ய அனைத்து கல்லூரி நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி சார்பில் சுற்றிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News