ஆன்மிகம்
திருவனந்தபுரத்தில் உள்ள புகழ்பெற்ற பத்மநாபசாமி கோவிலில் தரிசனம் செய்ய பக்தர்கள் செல்வதை படத்தில் காணலாம்.

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி

Published On 2020-08-27 03:20 GMT   |   Update On 2020-08-27 03:20 GMT
கொரோனா தடை நீங்கியதை தொடர்ந்து, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 666 பக்தர்கள் மட்டுமே சாமி கும்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளனர்.
திருவனந்தபுரம் :

கேரளாவில் புகழ் பெற்ற கோவில்களில் ஒன்று, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில். கோவிலில் உள்ள 6 நிலவறைகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியம் என புதையல் இருந்ததால், உலக புகழ் பெற்று விளங்குகிறது. இந்தியாவில் மார்ச் மாதம் கொரோனா பரவ தொடங்கியதால், நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பத்மநாபசாமி கோவில் உள்பட கேரளாவில் உள்ள அனைத்து கோவில்களிலும் கடந்த மார்ச் மாதம் 26-ந் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்தக்கு அனுமதிக்கப்படவில்லை. தினமும் வழக்கமான பூஜைகள் மட்டும் நடந்து வந்தது.

இந்தநிலையில், கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கேரள அரசு அனுமதி வழங்கியது. அதைத்தொடர்ந்து திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நடை நேற்று பக்தர்கள் தரிசனத்துக்காக திறக்கப்பட்டது. அதிகாலை 3.15 மணிக்கு வழக்கம் போல் நடை திறக்கப்பட்ட போதிலும்,

பக்தர்கள் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 6.45 மணி வரையிலும் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக 5 மணிக்கு நடை பெற்ற தீபாராதனையின் போது பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 5 மாதங்களுக்கு பிறகு பக்தர்கள் கோவிலுக்கு வந்து மகிழ்ச்சியுடன் சாமி கும்பிட்டனர்.

பத்மநாபசாமி கோவில் திறக்கப்பட்டது குறித்து கோவிலின் செயல் அதிகாரி வி.சதீசன் ஐ.ஏ.எஸ் கூறியதாவது:-

கோவில் இணைய தளத்தில் spst.in முன் பதிவு செய்து வரும் பக்தர்கள் மட்டுமே தற்போது சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 666 பேர் மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு மூப்பு அடிப்படையில் அவர்களுக்கு தரிசனத்திற்கான நேரம் ஒதுக்கீடு செய்யப்படும். அந்த நேரத்தில் வந்து பக்தர்கள் சாமியை தரிசிக்கலாம். கூட்டம் கூடுவதை தவிர்க்க இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது.

தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் முன் பதிவு செய்ததற்கான அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்து ஆதார் அட்டையுடன் தரிசனத்துக்கு வர வேண்டும். தரிசன முன் பதிவு குறைவான நாட்களில் ஆதார் அட்டை நகலை காண்பித்து முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News