செய்திகள்
சாலையோர கடை

சாலையோர வியாபாரிகள் கடை நடத்த 1,364 இடங்கள் தேர்வு- மாநகராட்சி பட்டியல் தயாரிக்கிறது

Published On 2021-10-18 10:19 GMT   |   Update On 2021-10-18 10:19 GMT
சென்னையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 27 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருந்தனர். ஆனால் இப்போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையோர வியாபாரிகளாக உள்ளனர்.
சென்னை:

சென்னை, டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பெரு நகரங்களில் சாலையோர வியாபாரிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதை ஒழுங்குப்படுத்தும் விதமாக மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு சட்டம்கொண்டு வந்தது. அதில் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அந்தந்த மாநகராட்சி பகுதியில் வியாபாரிகளை கண்டறிந்து விதிமுறை வகுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தது.

இந்த திட்டம் சென்னையில் செயல்படுத்த முடியாமல் நீண்ட வருடங்களாக கிடப்பில் கிடந்தது. இப்போது இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் சென்னையில் சாலையோர வியாபாரிகள் எவ்வளவு பேர் உள்ளனர். எந்தந்த ஏரியாவில் எவ்வளவு பேர் கடை நடத்துகிறார்கள் என்ற பட்டியல் எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு 27 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருந்தனர். ஆனால் இப்போது ஒரு லட்சத்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாலையோர வியாபாரிகளாக உள்ளனர்.

இவர்களுக்கு முறைப்படி அடையாள அட்டை வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு மண்டலத்திலும் செயற் பொறியாளர் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

அதில் மாநகராட்சி அதிகாரி, சட்டமன்ற உறுப்பினர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், போக்குவரத்து போலீசார் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

இவர்கள் ஒவ்வொரு மண்டலத்திலும் எந்தந்த தெருக்களில் சாலையோர வியாபாரிகள் கடை நடத்தலாம், எந்தந்த தெருக்களில் வியாபாரிகள் சாலையோர கடை போடக்கூடாது என்பதை முடிவு செய்வார்கள். சாலையோர வியாபாரிகள் கடை நடத்த 1,364 இடங்கள் தேர்வு செய்யப்பட உள்ளன.

அதன் அடிப்படையில் சாலையோர வியாபாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும். இந்த திட்டத்தை இந்த மாத இறுதிக்குள் செயல்படுத்த மாநகராட்சி பட்டியல் தயாரித்து வருகிறது.
Tags:    

Similar News