செய்திகள்
அமைச்சர் கடம்பூர் ராஜூ

அதிமுக - பாமக இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை: அமைச்சர் கடம்பூர் ராஜூ

Published On 2020-10-24 04:48 GMT   |   Update On 2020-10-24 04:48 GMT
“அ.தி.மு.க.-பா.ம.க. இடையே எந்தவித சர்ச்சையும் இல்லை“ என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
ஏரல்:

தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளார். தேர்தலின்போது அரசியல் கட்சிகள், சமுதாய அமைப்புகள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அதனை தேர்தல் அறிக்கையில் சேர்க்குமாறு கூறி வலியுறுத்துவார்கள். அந்த வகையில் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாசும் இட ஒதுக்கீடு தொடர்பாக கூறி இருக்கிறார். இதற்கும், கூட்டணிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு தேர்தல் ஒப்பந்தத்தின்படி, ராஜ்யசபா எம்.பி. பதவியை அன்புமணி ராமதாசுக்கு வழங்கி உள்ளோம். எங்களுக்குள் எந்தவித சர்ச்சையும் இல்லை. அ.தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடும்போது, அதில் இடம் பெறுவது குறித்து தலைமை முடிவு செய்யும்.

மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்குவது இயல்பானது. சுனாமி, கஜா புயல் போன்ற பேரிடர் காலத்திலும் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள் சிறப்பாக இருந்தது. இதனை நடிகர் கமல்ஹாசன் நினைத்து பார்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News