செய்திகள்
மெட்ரோ ரெயில்

மெட்ரோ ரெயிலில் தினமும் 51 ஆயிரம் பேர் பயணம்

Published On 2021-01-16 06:28 GMT   |   Update On 2021-01-16 06:28 GMT
மெட்ரோ ரெயிலில் இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை:

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

கொரோனாவுக்கு முன்பு தினமும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் பேர் பயணம் செய்து வந்தனர். அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சேவை நடந்து வந்தது. தற்போது சேவை நேரம் அதிகாலை 5.30 மணி முதல் தொடங்கி இரவு 11 மணி வரை நடக்கிறது.

மெட்ரோ ரெயில் நிலையங்கள் முழுவதும் குளிர்சாதன வசதி என்பதால் குறைந்த அளவில் பயணிகள் பயணம் செய்தனர்.

பன்னாட்டு விமான சேவை, உள்நாட்டு விமான பயணத்திற்கு கட்டுப்பாடு போன்ற காரணத்தாலும், ஐ.டி. நிறுவன பணியாளர்கள் வீடுகளில் இருந்து பணிபுரிவதாலும் கூட்டம் அதிகரிக்கவில்லை. செப்டம்பர் மாதத்தில் மீண்டும் சேவை தொடங்கிய போது 4000 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

படிப்படியாக 10 ஆயிரம், 20 ஆயிரம் என உயர்ந்து தற்போது 51 ஆயிரம் பேர் வரை தினமும் பயணம் செய்கிறார்கள்.

இந்த மாதத்தில் தான் பயணிகள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. ஆனாலும் கொரோனாவுக்கு முந்தைய நிலைக்கு இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-

மெட்ரோ ரெயில் சேவை வழக்கம் போல தொடங்கி நடைபெற்று வருகின்றன. கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் தற்போது அதிகரித்து வருகிறது. இந்த மாதத்தில் தான் 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இனிமேல் பயணிகள் எண்ணிக்கை உயரும் என்று எதிர்பார்க்கிறோம்.

திருவொற்றியூர் - வண்ணாரப்பேட்டை சேவை தொடங்கினால் பயணிகள் அதிகளவு பயன்படுத்த தொடங்குவார்கள்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
Tags:    

Similar News