செய்திகள்
மாணவர் ஒருவருக்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா உணவு பொருட்கள் தொகுப்புகளை வழங்கியபோது எடுத்த படம்.

பள்ளிக்கூட மாணவர்களுக்கு உணவு பொருட்கள் தொகுப்பு- கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வழங்கினார்

Published On 2020-09-18 09:42 GMT   |   Update On 2020-09-18 09:42 GMT
எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு உணவு பொருட்களின் தொகுப்பை மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா ஊட்டியில் வழங்கி தொடங்கி வைத்தார்.
ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் சத்துணவு பயனாளிகளுக்கு அரிசி பருப்பு மற்றும் முட்டை அடங்கிய உணவு பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி ஊட்டி சி.எஸ்.ஐ. சி.எம்.எம்.மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தொகுப்புகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் பள்ளிக்கூட மாணவ- மாணவிகளுக்கு உணவு பொருட்களின் தொகுப்பு வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. தொடக்கப் பள்ளியில் பயிலும் 13 ஆயிரத்து 604 மாணவ-மாணவிகளுக்கு தலா 100 கிராம் அரிசி மற்றும் 40 கிராம் பருப்பு வீதம் ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை வழங்கப்படுகிறது.

இதற்காக 1 லட்சத்து 65 ஆயிரத்து 648 கிலோ அரிசி, பருப்பு வழங்கப்படுகிறது. மேலும் உயர்நிலைப் பள்ளியில் பயிலும் 11 ஆயிரத்து 448 மாணவ-மாணவிகளுக்கு தலா 150 கிராம் அரிசி மற்றும் 56 கிராம் பருப்பு வீதம் மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 59 கிலோ வழங்கப்பட்டுள்ளது. மேலும் 24 ஆயிரத்து 244 மாணவர்களுக்கு 2 லட்சத்து 42 ஆயிரத்து 440 முட்டைகள் வழங்கப்படுகிறது.

மாணவ-மாணவிகளுக்கு தமிழக அரசு அதிக முக்கியத்துவம் அளித்து அவர்களின் கல்வி அறிவை வளர்த்து வருகிறது. இதேபோல் அவர்கள் ஆரோக்கியமாக வாழ அரசு வழிவகை செய்துள்ளது. எனவே பெற்றோர் தங்களது குழந்தைகளுக்கு எம்.ஜி.ஆர். சத்துணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு பொருட்களை அவர்களுக்கு வழங்கி ஆரோக்கியமாக வளர உறுதுணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) சாலமன், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர், ஜெய்சங்கர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் குமார் பள்ளி தலைமை ஆசிரியர்கள் எஸ்தர், வசந்தி, இவான் கிரேசி உள்பட அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News