செய்திகள்
கோப்புப்படம்

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்க 450 இடங்களில் அதிரடி சோதனை

Published On 2020-12-31 07:35 GMT   |   Update On 2020-12-31 09:23 GMT
சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தை தடுக்க 450 இடங்களில் இன்று இரவு 10 மணிக்கு மேல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.

சென்னை:

ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்கள்  சென்னையில் களைகட்டும். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறுவது உண்டு.

ஆனால் சென்னையில் மெரினா கடற்கரையில் பல்லாயிரக்கணக்கானோர் கூடி புத்தாண்டை உற்சாகத்தோடு வரவேற்பார்கள்.

இதனால் புத்தாண்டு பிறக்கும் அன்று நள்ளிரவில் மெரினா கடற்கரை திருவிழா போல காட்சி அளிக்கும். திரும்பிய திசை எல்லாம் மக்கள் திரண்டிருப்பார்கள்.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக மக்கள் கூடுவதை கருத்தில் கொண்டு மாலையிலேயே கடற்கரை சாலையில் போக்குவரத்து தடை செய்யப்படும். நள்ளிரவு 12 மணிக்கு சென்னை போலீஸ் கமி‌ஷனர் நேரில் சென்று பொது மக்களோடு கேக் வெட்டி கொண்டாடுவது ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் வழக்கமாகவே இருந்து வந்துள்ளது.

சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீடுகளில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு 2 வாரங்களுக்கு முன்பே ஓட்டல் நிர்வாகத்தினர் தயாராகி விடுவார்கள்.

வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்படும் நடன அழகிகளும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பங்கேற்று நடனமாடுவார்கள். இளம் ஜோடிகள் மற்றும் குடும்பத்தினர் புத்தாண்டை கொண்டாடும்  வகையில் தனித்தனியாக இட வசதிகளும் நட்சத்திர ஓட்டல்களில் செய்யப்பட்டு இருக்கும். இப்படி புத்தாண்டு அன்று சென்னை மாநகரம் ஒவ்வொரு ஆண்டும் உற்சாகத்தோடு காட்சியளிக்கும்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலால் தமிழக அரசு நட்சத்திர ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி இல்லை என்றும் அன்று இரவு 10 மணிக்கு மேல் ஓட்டல்களை கண்டிப்பாக மூட வேண்டும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளது.

பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களில் அதிகளவில் ஒன்றுகூடி கொரோனா பரவலுக்கு வழி ஏற்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே இந்த நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது.

இன்று இரவு 2020-ம் ஆண்டு முடிந்து, புதிய ஆண்டு பிறக்க இருக்கிறது. புத்தாண்டை வரவேற்பதற்காக பொது இடங்களிலும், மெரினா உள்ளிட்ட கடற்கரை பகுதிகளிலும், நட்சத்திர ஓட்டல்களிலும், பண்ணை வீடுகளிலும் யாரும் ஒன்றுகூடி விடக்கூடாது என்பதற்காக சென்னை மாநகர போலீசார் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதன்படி சென்னையில் இன்று இரவு சிறிய பெட்டிக்கடைகள் முதல் பெரிய நட்சத்திர ஓட்டல்கள் வரை அனைத்தும் இரவு 10 மணிக்கு மூடப்பட உள்ளது.

இரவு 10 மணிக்கு பிறகு தேவையில்லாமல் வாகனங்களில் யாரும் வெளியில் சுற்றக்கூடாது என்று போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.

சென்னையில் ஒவ்வொரு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் 3 இடங்களில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடைபெற உள்ளது.

சென்னை மாநகரில் மொத்தம் 150 காவல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதன்படி 450 இடங்களில் இன்று இரவு 10 மணிக்கு மேல் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட உள்ளனர்.

சென்னையில் 38 பெரிய மேம்பாலங்கள் உட்பட 75 மேம்பாலங்கள் உள்ளன. இந்த மேம்பாலங்கள் அனைத்தும் இரவு 10 மணிக்கு மேல் சீல் வைக்கப்படுகிறது.

தடுப்பு வேலிகளை வைத்து அனைத்து மேம்பாலங்களையும் போலீசார் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மெரினா கடற்கரை சாலை இரவு 9 மணிக்கு பிறகே மூடப்படும் என்று போலீசார் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுபோல சென்னையில் உள்ள அனைத்து சாலைகளும் போலீசாரின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட உள்ளது.

அண்ணாசாலை, பூந்த மல்லி நெடுஞ்சாலை, கோயம்பேடு 100 அடி ரோடு உள்ளிட்ட அனைத்து முக்கிய சாலைகளிலும் இரவு 10 மணிக்கு மேல் தடுப்பு வேலிகளை அமைத்து போலீசார் தீவிரமாக கண்காணிக்க உள்ளனர்.

இரவு 10 மணிக்கு பிறகு நடைபெறும் தீவிர வாகன சோதனையின் போது மதுபோதையில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களை யாராவது ஓட்டி வந்தால், அவர்களை மடக்கி பிடித்து கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘குடிபோதையில் வாகனங்களை ஓட்டி வருபவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்’’ என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள இந்த தடை குறித்து சென்னை மாநகர போலீஸ் கமி‌ஷனர் மகேஷ்குமார் அகர்வால் கூறும்போது, ‘‘பொதுமக்கள், போலீசார் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தமிழக அரசு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அறிவித்துள்ள வழிமுறைகளை அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இன்று இரவு 10 மணிக்கு மேல் நள்ளிரவு புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடும்பத்துடனோ, நண்பர்கள் குழுவாகவோ கூட்டம் கூட போலீசார் தடை விதித்துள்ளனர்.

கிழக்கு கடற்கரை சாலையின் முக்கிய பகுதிகளான முட்டுக்காடு, கோவளம், நெம்மேலி, மாமல்லபுரம், பூஞ்சேரி, வெங்கம்பாக்கம், கல்பாக்கம், வாயலூர், கூவத்தூர் போன்ற பகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் சோதனை சாவடிகள் அமைத்து 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கடற்கரை ரிசார்ட், பண்ணை வீடுகள், விடுதிகளில் எங்காவது சட்ட விரோதமாக புத்தாண்டு நடன நிகழ்ச்சியோ, கூட்டு விருந்துகள் நடத்தவோ ஏற்பாடுகள் நடக்கிறதா? என போலீசார் ரகசியமாக விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News