செய்திகள்
திரிபாதி

‘மம்தா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை’ - பதவிக்காலம் முடிந்த கவர்னர் திரிபாதி குற்றச்சாட்டு

Published On 2019-07-28 00:12 GMT   |   Update On 2019-07-28 00:12 GMT
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை என்று பதவிக்காலம் முடிந்த கவர்னர் கேசரிநாத் திரிபாதி குற்றம் சாட்டினார்.
கொல்கத்தா:

மேற்கு வங்காள மாநிலத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி 2011-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. கடந்த 5 ஆண்டுகளாக கவர்னர் பதவி வகித்த கேசரிநாத் திரிபாதி பதவிக்காலம் 23-ந் தேதி முடிந்தது.

அவருக்கும், மம்தா பானர்ஜிக்கும் இடையேயான கடந்த 5 ஆண்டு கால உறவு, உரசல்களுடனானது. இருவரும் பொதுவெளியில் ஒருவரை ஒருவர் வெளிப்படையாக விமர்சித்து வந்தனர்.

பதவிக்காலம் முடிந்து செல்லும் நிலையில் கேசரிநாத் திரிபாதி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு நேற்று சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

முதல்-மந்திரி மம்தாவிடம் தொலைநோக்கு பார்வை உள்ளது. தனது முடிவுகளை நடைமுறைப்படுத்த அவருக்கு அதிகாரம் இருக்கிறது. ஆனால் அவரிடம் நிதானம் வேண்டும். சமயங்களில் அவர் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறார். இதை அவர் கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.

அவரது சமரசக்கொள்கை, சமூக நல்லிணக்கத்தை மோசமாக பாதிப்பதாக உள்ளது. எல்லா குடிமக்களையும் அவர் சமமாக நடத்த வேண்டும். பாரபட்சம் காட்டக்கூடாது. அவர் பாரபட்சம் காட்டுகிறார். அவரது அறிக்கைகளே அதை காட்டுகின்றன.

சட்டம்-ஒழுங்கு நிலை சரியில்லை. அதில் நிறைய முன்னேற்றம் வேண்டும். மக்கள் ஏன் வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்பது எனக்கு புரியவில்லை. இதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.



சட்டம்-ஒழுங்கு பிரச்சினை என்பது மாநில விவகாரம். இது சரியில்லை என்பதே ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த போதுமானது அல்ல.

அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடக்காதபோதுதான், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News