செய்திகள்
விளைநிலங்களில் தேங்கி உள்ள தண்ணீர்

தூத்துக்குடியில் மீண்டும் கனமழை- கயத்தாறில் கால்வாய் உடைந்து ஊருக்குள் சென்ற வெள்ளம்

Published On 2021-11-30 05:49 GMT   |   Update On 2021-11-30 05:49 GMT
தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

கடந்த 25-ந்தேதி அதி கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் குடியிருப்புகளிலும், விளைநிலங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

தூத்துக்குடி மாநகர குடியிருப்புகளை சூழ்ந்து மழைநீரை வெளியேற்றும் பணிகள் கடந்த 5 நாட்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது. 300-க்கும் மேற்பட்ட இடங்களில் 313 மோட்டார்களை பயன்படுத்தி தண்ணீர் உறிஞ்சி அகற்றப்படுகிறது.

அதே போன்று டேங்கர் லாரிகள் மூலமும் மழை நீர் உறிஞ்சி வெளியேற்றப்படுகிறது. பல இடங்களில் சாலைகளை உடைத்தும், ராட்சத குழாய்கள் பொருத்தியும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான இடங்களில் தேங்கிய மழைநீர் வடியத் தொடங்கி உள்ளது.

எனினும் பிரைண்ட்நகர், சிதம்பர நகர், சுப்பையா முதலியார் காலனி, அமுதா நகர், போல்டன்புரம், லூர்தம்மாள்புரம், செயிண்ட் மேரீஸ் காலனி, குறிஞ்சி நகர், ராம் நகர், ரகுமத் நகர், தனசேகரன் நகர், கதிர்வேல் நகர், முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று 6-வது நாளாகியும் இன்னும் மழைநீர் வடியவில்லை.

இதனால் அத்தியாவசிய தேவைக்கு வெளியில் சென்று வருவதற்கு அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு பண்ணை பசுமை அங்காடி மூலம் காய்கறிகள் வழங்கப்படுகிறது.

பெரியக்கடைதெரு, மறக்குடி தெரு, அம்பேத்கர் நகர் உள்ளிட்ட இடங்களில் மழைநீருடன் சாக்கடை நீரும் கலந்து குளம் போல் தேங்கி உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் மீண்டும் கனமழை கொட்டியது. இதனால் மீண்டும் மழை நீர் தேங்க தொடங்கி உள்ளது.

கயத்தாறு பகுதியில் பெய்த கனமழை காரணமாக உப்பாற்று ஓடையில் இருந்து அதிகளவு வந்த தண்ணீர் சன்னல் புதுக்குடி கால்வாயில் அதிகளவு சென்றது. இதனால் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் ஊருக்குள் புகுந்ததால் சாலைகளில் மழைநீர் ஆறு போல் ஓடியது.

மேலும் ஏராளமான விளைநிலங்களிலும் தண்ணீர் புகுந்ததால் அங்குள்ள பயிர்கள் மூழ்கி நாசமானது.

இன்று காலை வரை அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 90 மில்லிமீட்டர் மழை பதிவானது. இதேபோல் கயத்தாறில் 59, வைப்பாறில் 50, திருச்செந்தூரில் 48, சாத்தான்குளத்தில் 46.2, ஓட்டப்பிடாரம், விளாத்தி குளத்தில் தலா 36, காடல் குடியில் 30, கடம்பூரில் 29, தூத்துக்குடியில் 23.2 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது.

மேலும் கோவில்பட்டி, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம், கீழஅரசரடி, வேடநத்தம் உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளது.


Tags:    

Similar News