ஆட்டோமொபைல்

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகள்?

Published On 2018-01-07 11:19 GMT   |   Update On 2018-01-07 11:19 GMT
இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் மூன்று சிறப்பு சலுகைகளை மத்திய அரசு அறிவிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் இந்தியாவில் காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்து கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நிலையை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதன்படி இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பச்சை நிறம் கொண்ட பதிவு எண் கொண்ட பலகை (நம்பர் பிளேட்) வழங்க நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுதவிர எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மட்டும் சிறப்பு சலுகைகளை வழங்கவும் நிதி ஆயோக் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவ்வாறு எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு இலவச பார்க்கிங் மற்றும் நாடு முழுக்க இயங்கி வரும் சுங்க சாவடி கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களை நிறுத்தி வைக்க பிரத்யேக இடம் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது. 



மேற்குறிப்ட்ட சலுகைகள் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அறிவிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை கட்டுப்படுத்தி எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாற்றம் செய்வதன் மூலம் சாலை போக்குவரத்தில் 64 சதவிகித எரிபொருளை சேமிக்க முடியும் என்றும் 2030-ம் ஆண்டிற்குள் 37 சதவிகிதம் வரை காற்று மாசு அளவை குறைக்க முடியும்.

மேவும் எலெக்ட்ரிக் வாகன பயன்பாடு மூலம் 2030-ம் ஆண்டு வாக்கில் பெட்ரோல் மற்றும் டீசல் கட்டணங்களில் 6000 கோடி அமெரிக்க டாலர்கள் வரை சேமிக்க முடியும். எனினும் இவை அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற இந்தியாவில் 2030-ம் ஆண்டிற்குள் அனைத்து வாகனங்களும் எலெக்ட்ரிக் மூலம் இயங்க வேண்டும்.
Tags:    

Similar News