ஆன்மிகம்
நெல்லையப்பர் கோவில் தைப்பூச திருவிழா தீர்த்தவாரி தாமிரபரணி ஆற்றில் நடந்தபோது எடுத்த படம்.

நெல்லையப்பர் கோவிலில் தீர்த்தவாரி- திரளான பக்தர்கள் தரிசனம்

Published On 2021-01-29 02:59 GMT   |   Update On 2021-01-29 02:59 GMT
நெல்லையப்பர் கோவில் தீர்த்தவாரி நெல்லை சந்திப்பு கைலாசபுரம் மண்டபத்தில் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் தைப்பூச திருவிழா ஒவ்வொரு ஆண்டும் 11 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நாட்களில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கடந்த 22-ந் தேதி பகல் 12 மணிக்கு நெல்லுக்கு வேலியிட்ட நிகழ்ச்சி நடந்தது.

10-ம் நாளான நேற்று நெல்லை சந்திப்பு கைலாசபுரம் சிந்துபூந்துறை தீர்த்தவாரி மண்டபத்தில் தைப்பூச தீர்த்தவாரி நடைபெற்றது. இதையொட்டி பகல் 12 மணிக்கு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திரதேவி ஆகிய மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது.

பின்னர் சுவாமி-அம்பாள் நெல்லையப்பர் கோவிலில் இருந்து புறப்பட்டு சுவாமி நெல்லையப்பர் நெடுஞ்சாலை வழியாக ஈரடுக்கு மேம்பாலம் கீழ்ப்பகுதியில் உள்ள கைலாசபுரம் சிந்துபூந்துறை தைப்பூச மண்டபம் வந்தடைந்தனர். அவர்களுடன் அகஸ்தியர், தாமிரபரணி, குங்கிலிய நாயனார், சண்டிகேஸ்வரர், அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகிய மூர்த்திகளும் பின்தொடர்ந்து வந்தனர்.

சுவாமி-அம்பாளுக்கு தைப்பூச மண்டபத்தில் சிறப்பு அபிஷேகம் வழிபாடு நடந்தது. தொடர்ந்து மாலை 4.30 மணி அளவில் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடந்தது. அஸ்திரதேவர், அஸ்திர தேவி ஆகியோருக்கு தாமிரபரணி ஆற்றில் தீர்த்தவாரி நடத்தப்பட்டது. பின்னர் சிறப்பு தீபாராதனை நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் நெல்லையப்பர் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, கோவில் பணியாளர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாலையில் சுவாமி-அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் தீர்த்தவாரி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு டவுன் பாரதியார் தெரு, தெற்கு புது தெரு வழியாக ரதவீதி சுற்றி நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து சேர்ந்தனர்.
Tags:    

Similar News