செய்திகள்
கேஎஸ் அழகிரி

சிவகாசி பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்: ராஜஸ்தான் முதல்-மந்திரிக்கு, அழகிரி கடிதம்

Published On 2020-11-03 11:23 GMT   |   Update On 2020-11-03 11:23 GMT
பட்டாசுகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கே.எஸ். அழகிரி கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை:

ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு கே.எஸ்.அழகிரி இன்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் பட்டாசு உற்பத்தியில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருவதையும், அதில் இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் 60 லட்சம் பேர் பணியாற்றிக் கொண்டிருப்பதையும் தங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இந்தியாவிலேயே முன்னணிப் பட்டாசு உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களைக் கொண்ட சிவகாசி நகரத்திலிருந்து, சுற்றுச்சூழலில் அதிக தரத்தை எதிர்பார்க்கும் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பட்டாசுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பசுமைப் பட்டாசுகள் தயாரிப்பது தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு இணங்க, ஏற்கெனவே பயன்படுத்தி வந்த சல்பருக்குப் பதில் புதிய ரசாயனமான பேரியம் நைட்ரேட்டைப் பயன்படுத்தி புது வகையான ஒளி உமிழும் பட்டாசுகள் தயாரிப்பில் இந்தத் தொழிற்சாலைகள் ஈடுபட்டு வருகின்றன. சல்பர் ரசாயனப் பொருளை அகற்றியதால், சல்பர் டையாக்ஸைடு வெளியேறி பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அங்கீகரித்த சிஎஸ்ஐஆர்-என்இஇஆர்ஐ போன்ற தேசிய அளவிலான நிறுவனங்களின் விஞ்ஞானப்பூர்வமான மாற்றத்தின் அடிப்படையில் புதிய பட்டாசுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. வெளியேறும் வாயுக்களின் அளவும் வரையறுக்கப்பட்ட அளவுக்குள் பயன்படுத்தப்படுகிறது.

சிவகாசிப் பட்டாசுத் தொழிற்சாலைகள் உள்ளூர் ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பத்தினருக்கு மட்டும் வேலை வழங்கவில்லை. இந்தியா முழுவதுக்கும் சிறு வர்த்தகர்கள், சரக்குப் போக்குவரத்து மேற்கொள்பவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை உள்ளடக்கிய பெரிய அளவிலான விநியோகச் சங்கிலியைக் கொண்டுள்ளது.

பட்டாசு விற்பனையைத் தடை செய்தால், இவர்களது வாழ்க்கை நிலை பெரிதும் பாதிக்கப்படும். நமது கொண்டாட்டங்களை வண்ணமயமாக்க ஆண்டு முழுவதும் உழைக்கும் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்க்கை நிலையும் மோசமான சூழலுக்குத் தள்ளப்படும்.

இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, அனைத்துப் பட்டாசுகள் விற்பனைக்கும் விதிக்கப்பட்ட ஒட்டுமொத்த தடைக்கு விலக்கு அளிக்குமாறு தங்களைக் கேட்டுக் கொள்கிறேன். மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டு சிவகாசியில் தயாரிக்கப்படும் பசுமைப் பட்டாசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

பாரம்பரிய தீபாவளிப் பண்டிகையில் சிவகாசிப் பட்டாசுகள் நம்மிடையே உற்சாகத்தை அளிக்கின்றன. கொரோனாவால் ஆட்பட்டுள்ள இருண்ட சூழலிலிருந்து சற்று விடுபட பட்டாசுகள் காரணமாக இருக்கின்றன. பசுமைப் பட்டாசுகளால் உடல்நலத்துக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்பதையும், சுற்றுச்சூழலுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்பதையும் நான் உங்களுக்கு அறுதியிட்டுக் கூறுகின்றேன். உங்களுக்கும், ராஜஸ்தான் மக்களுக்கும் மகிழ்ச்சியான, பாதுகாப்பான மற்றும் வண்ணமயமான தீபாவளி நல்வாழ்த்துகள்".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News