லைஃப்ஸ்டைல்
செட்டிநாட்டு நகைகள்

பாரம்பரியம் நிறைந்த செட்டிநாட்டு நகைகள்...

Published On 2021-11-13 03:25 GMT   |   Update On 2021-11-13 03:25 GMT
ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.
செட்டிநாடு என்பது தனக்கென பல்வேறு வகையான தனித்தன்மைகளைக் கொண்ட ஒரு பகுதியாகவே கருதப்படுகின்றது. பல நூறாண்டுகளுக்கு முன்னரே செட்டி நாட்டிலிருந்து கடல் கடந்து வாணிபம் செய்யச் சென்று வந்தார்கள் என்பதை வரலாற்று நூல்கள் மூலம் அறியலாம். கடல் கடந்து சென்று வந்த அவர்கள் பல கலாச்சாரங்களை நம்முடைய கலாச்சாரத்திற்கு ஏற்றவாறு வீடுகள் கட்டுமானம், நகைகள் வடிவமைப்பு போன்றவற்றில் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

இன்று வரையிலும் செட்டிநாட்டு நகைகள் உறுதி வாய்ந்தவையாகவும், பாரம்பரியம் மிக்கவையாகவும் கருதப்பட்டு அவர்களது திருமண நிகழ்ச்சிகளில் கட்டாயம் அணியப்படுகின்றன. அதில் கழுத்திரு சோடிப்பு திருமாங்கல்யம், கௌரி சங்கம், வைர மாங்கல்யசரம், கெம்ப்பு செட்டுகள், அட்டிகைகள், காப்புகள், காதணிகள் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

செட்டிநாட்டு நகைகளை மத, சடங்கு மற்றும் அலங்கார நகைகளாக வகைப்படுத்துகிறார்கள். பர்மா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து விலையுயர்ந்த வைரம், முத்து ரூபி போன்ற கற்களைக் கொண்டு வந்து தங்களுடைய வீடுகளுக்கே பொற்கொல்லர்களை வரவழைத்து உறுதியான, அழகான மற்றும் பாரம்பரியமான நகைகளை வடிவமைத்து அணிந்து கொண்டவர்கள் செட்டிநாட்டு மக்கள் என்றால் அது மிகையாகது.

அழகிய கெம்ப்புக் கற்களைக் கொண்டு செய்யப்படும் நகைகளை கைகாளலேயே டிசைன்களை வரைந்து வடிவமைத்து செய்வது தனிச்சிறப்பான விஷயமாகக் கருதப்படுகின்றது. செட்டிநாட்டு நகைகளில் கற்கள் பதிக்கப்பட்டு பின்புறம் மூடப்பட்டு வருபவை. உறுதியானவையாகவும், பல தலைமுறைகள் தாண்டி உழைப்பவையாகவும் இருக்கின்றன. கெம்ப்பு அட்டிகைகள், வளையல்கள், கம்மல்கள் மட்டுமல்லாது ஒட்டியாணம், வங்கி போன்றவையும் தனித்தனியாகவும், செட்டாகவும் கிடைக்கின்றன. கெம்புக் கற்களினால் செய்யப்படும் நகைகளை அனு அனுவாக ரசித்து அணிபவர்கள் கூட்டம் ஏராளம் என்றே சொல்லலாம்.

ராஜாக்கள் நாட்டை ஆண்ட பொழுது அணிந்திருந்த பழங்கால நகைகளின் டிசைன்களை வடிவமைத்து செய்து தரும் பொற்கொல்லர்கள் இன்றளவும் செட்டிநாட்டில் இருக்கிறார்கள்.

வைர நகைகளை இன்றளவும் செட்டிநாட்டிற்குச் சென்று வாங்கி வருகிறார்கள் என்றால் அதன் தரமும், விலையும் அந்த நகைகளின் கட்டமைப்புமே அதற்கு காரணம் என்று சொல்லலாம். நகை செய்யக்கூடிய தங்கக் கட்டிகளை குறைந்தபட்சம் ஆயிரம் முறையாவது அதற்கென இருக்கும் கல்லின் மேல் வைத்து அடித்து தங்கத்தை இறுக்குகிறார்கள். அதன் பின்னர் அந்த தங்கக் கட்டிகளின் மேல் டிசைன்கள் வரையப்பட்டு, துவாரங்களைப் போட்டு வைரக் கற்களானது பதிக்கப்படுகின்றது. இவ்வாறு உறுதியாக செய்யப்படும் வைரநகைகள் எத்தனை ஆண்களானாலும் ஜொலி ஜொலிப்பு குறையாமல் ஒளிர்கின்றன. ஏழு கல் வைரத்தோடு மிகவும் பிரசித்தி பெற்றவையாகும்.

கௌரிசங்கம்:- செட்டிநாட்டிலிருக்கும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் வழி வழியாக அணியக்கூடிய நகை என்று கூறப்படும் இந்த நகையானது பெரிய ஹாரம் போன்று மார்பை அலங்கரிக்கின்றது. ஒரு குறிப்பிட்ட வயது எட்டும் ஆண்கள் குருமார்களிடம் மந்திர உபதேசம் பெற்றுக் கொள்வது காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கமாகும். உருத்திராட்ச மாலையான இதில் உருத்திராட்சங்களை ஒன்றுடன் ஒன்றாக இணைக்கும் இணைப்புகள். பெரிய பெண்டன்ட்டுகள் போன்றவை தங்கத்தில் அமைக்கப்படுகின்றது. இந்த பெண்டன்ட்டில் ரிசப வாகனத்தில் சிவசக்தி சமேதாரராக அமர்ந்திருக்கும் ரிசபருக்கு வடிவம் பொறிக்கப்பட்டிருக்கும்.

கழுத்திரு:- திருமணத்தன்று மணமகனால் மணமகளுக்கு அணிவிக்கப்படும் திருமாங்கல்யமே கழந்திருவாகும். நகரத்தார தாலி என்றும் இது அழைக்கப்படுகின்றது. இந்த நகையானது இன்றளவும் இருபது முதல் இருபத்தைந்து சவரன் தங்கத்தால் செய்யப்படுவது குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

மங்களச்சரம்:- தாலி மட்டுமல்லாது தாலிச் சங்கிலி முழுவதுமே வைரக்கற்களால் பதிக்கப்பட்டு செய்யப்படும் மங்களமான கழத்தாலியாகும்.

கண்டசரம், பூச்சரம்:- கழுத்தை ஒட்டி அணியக்கூடிய அட்டிகையில் வைரக்கற்கள் பதிக்கப்பட்டு வருவது கண்டசரமாகும். பூ வேலைப்பாடுகளுடன் கூடிய தங்கச்சங்கிலி முழுவதும் வைரக்கற்களால் பதித்து செய்யப்படும் கழுத்தணியே பூச்சரம் என்று அழைக்கப்படுகின்றது.

காப்புகள்:- வைரக்கற்கள் பதித்து செய்யப்பட்ட கை காப்பானது வைரக்காப்பென்றும், தங்கத்தினால் நெளி நெளியாக வளைந்து செய்யப்பட்ட காப்பு தங்கக்காப்பென்றும், நீலக்காப்பு, சிவப்பு கல்லு காப்பு, பச்சைக்கல்லுக்காப்பு, முத்துக்காப்பு, கருகுமணி போன்ற தங்கத்தால் செய்யப்பட்ட பாசி பதிக்கப்பட்டு வரும் பாசிக்காப்பு என காப்புகளின் பலவகைக் காப்புகளை அந்தக் காலத்திலேயே அணிந்திருக்கிறார்கள்.

அருப்புதடை:- வைரவேட்டு வரிகள் அல்லது பூ நெளிகள் கொண்டு யானை முடி பதிக்கப்பட்டு செய்யப்படும் விரலில் அணியும் மோதிரம்.

இவை மட்டுமல்லாமல் ஒற்றை வடசங்கிலி இரட்டை வடசங்கிலி, மாங்காய் மாலை, தலையில் குத்தும் கொண்டை ஊசி, சேலையில் குத்தக் கூடிய ஊக்குகள் என அனைத்திலும் தங்கமானது அதிக அளவில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இன்று பிரேசிலெட் என்று அழைக்கப்படும் மணிக்கட்டில் அணியப்படும் நகையானது பல நூற்றாண்களுக்கு முன்னரே குருமாத்து என்ற பெயரில் கைக்காப்பாக ெசட்டிநாட்டு மக்களால் அணியப்பட்டிருக்கின்றது.
Tags:    

Similar News