செய்திகள்
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

திருவண்ணாமலையில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை- ராஜேந்திர பாலாஜி உறுதி

Published On 2019-11-13 12:03 GMT   |   Update On 2019-11-13 12:03 GMT
திருவண்ணாமலை மாவட்டத்தில் பால் பண்ணை, தீவன தொழிற்சாலை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி அளித்துள்ளார்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 12 தொகுப்பு பால் குளிரூட்டு மையங்கள் திறப்பு விழா, ரூ.45 லட்சம் மதிப்பில் புதியதாக கட்டப்பட உள்ள நவீன ஆவின் பாலகம் அடிக்கல் நாட்டு விழா, 450 பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ.1 லட்சத்து 88 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கும் விழா மற்றும் கருத்தரங்கு திருவண்ணாமலை வேங்கிக்கால் ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபத்தில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார். ஆவின் பொது மேலாளர் உலகநாதன் வரவேற்றார். தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையத்தின் நிர்வாக இயக்குனர் காமராஜ், திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய (ஆவின்) பெருந்தலைவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு, பால் குளிரூட்டும் மையங்களை திறந்து வைத்து, நவீன ஆவின் பாலக புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பால் உற்பத்தியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார். இதைத் தொடர்ந்து பால் உற்பத்தியில் பொருளாதார வளர்ச்சி குறித்த கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலமாக தினமும் 3 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. விவசாயத்தில் முன்னணி மாவட்டமான இந்த மாவட்டம் பால் வளத்திலும் முன்னணி மாவட்டமாக திகழ்ந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்துக்கு பால் பண்ணையும், தீவன தொழிற்சாலையும் அமைத்து தர வேண்டும் என்று அனைவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை ஏற்று நடப்பு நிதியாண்டிலேயே முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து 2 கோரிக்கையையும் நிறைவேற்றி தருவது எனது கடமையாகும்.

இம்மாவட்டத்தில் பால் உற்பத்தியாளர்கள் பயனடையும் விதமாக 12 தொகுப்பு பால் குளிரூட்டும் மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் எத்தனை வேண்டுமானாலும் திறந்து வைக்க முன்வருவேன்.

திருவண்ணாமலை நகரில் உள்ள பால் குளிரூட்டும் வளாகத்தில் ஆவின் பால் மற்றும் பால் உபபொருட்களின் நுகர்வோர்கள் பயனடையும் விதமாக ரூ.45 லட்சம் மதிப்பில் நவீன ஆவின் பாலகம் தொடங்குவதற்காகவும் பூமி பூஜை போடப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், எம்.எல்.ஏ.க்கள் தூசி மோகன், பிச்சாண்டி, ஆவின் துணைத் தலைவர் பாரிபாபு ஆகியோர் பேசினர்.

நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் எம்.பி. வனரோஜா, முன்னாள் எம்.எல்.ஏ. நளினிமனோகரன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நைனாகண்ணு, கூட்டுறவு ஒன்றிய முன்னாள் தலைவர் அமுதா, ஆவின் இயக்குனர்கள் முனுசாமி, அருண், முருகன், தினகரன், கஜேந்திரன், புஷ்பலிங்கம், சுப்பிரமணி, முனுசாமி, ஜோதி, இந்திரா, மஞ்சுளா, ரேவதி, ஜெயந்தி, கீதா, தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை நகர்புற கூட்டுறவு வங்கி தலைவர் குணசேகரன், கூட்டுறவு அமைப்பு, பாய்ச்சல் பால் கூட்டுறவு சங்க தலைவர் மணி, செங்கம் தலைவர் வெங்கடேசன், செயலாளர் பி.வெங்கடேசன், படவேடு தலைவர் சங்கர், செயலாளர் மன்னியப்பன், ஆரணி தலைவர் குமுதவள்ளி, செயலாளர் சத்தியா, களம்பூர் தலைவர் பஞ்சாட்சரம், செயலாளர் தண்டாயுதபாணி மற்றும் கிளை சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News