செய்திகள்
மாணவர்கள்

சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு மதிப்பெண் பட்டியலை இறுதி செய்ய அவகாசம் நீட்டிப்பு

Published On 2021-07-21 16:16 GMT   |   Update On 2021-07-21 16:16 GMT
மதிப்பெண்களை இறுதி செய்வதில், பள்ளிகளுக்கு உதவுவதற்காக, தலைமையகத்தின் தேர்வு பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

கொரோனா பெருந்தொற்றால் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை மத்திய அரசு ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. மேலும், தேர்வு முடிவை எந்த முறையில் நிர்ணயிக்கலாம் என்பது குறித்து ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தது.

அதன் அடிப்படையில் மதிப்பெண் கணக்கிடப்பட்டு வருகிறது. இந்த பணியை முடித்து தேர்வு முடிவுகளை ஜூலை 31க்குள் அறிவிக்கவேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

பள்ளிகள் மதிப்பெண் கணக்கிடும் பணியை ஜூலை 22ம்தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. தற்போது இந்த அவகாசத்தை ஜூலை 25ம் தேதி வரை நீட்டித்துள்ளது.

பக்ரீத் விடுமுறை தினமான இன்றும் சிபிஎஸ்இ அதிகாரிகள் பணி செய்தனர். இதன்மூலம், திட்டமிட்டபடி தேர்வு முடிவை சிபிஎஸ்இ வெளியிட முடியும்.

மதிப்பெண்களை இறுதி செய்வதில், பள்ளிகளுக்கு உதவுவதற்காக, தலைமையகத்தின் தேர்வு பிரிவு மற்றும் பிராந்திய அலுவலகங்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு, திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காக மீண்டும் விருப்பத் தேர்வு நடைபெறும் தேதி, தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி ஆகியவற்றை அறிவிக்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News