செய்திகள்
கோப்புபடம்

சமூக இடைவெளி கடைபிடிக்காத டீக்கடைகள் ஒரு வாரம் மூடப்படும் - கோவை மாநகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை

Published On 2021-04-29 10:30 GMT   |   Update On 2021-04-29 10:30 GMT
கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

கோவை:

கோவை மாநகராட்சியில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் குமாரவேல் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டு நோயுடன் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு இருப்பவர்கள், வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது. பாதிப்பிற்குள்ளாகி வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே வருபவர்களின் வீடுகளை அடைத்து வைக்கப்படும், அவர்களுக்குத் தேவைப்படும் அத்தியாவசிய சேவைகள் மாநகராட்சி மூலம் வழங்கப்படும்.

ஒரே தெருவில் 3 வீடுகளுக்கு மேல் நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த தெரு முழுமையும் தடுப்பு அமைத்துக் கண்காணிக்கப்படும். தடுப்பு அமைத்தல் மற்றும் தடுப்பூசி போடுதல் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் மற்றும் குடியிருப்பு நலச்சங்கங்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். நோய் பரவுதல் அதிகம் காணப்படும் பகுதிகளில் வாரச் சந்தைகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வண்ணம் செயல்படத் தவறும் பட்சத்தில், அது முழுமையாக மூடிவைக்கப்படும்.

உணவகங்கள், பேக்கரிகள் மற்றும் தேநீர் கடைகளின் முன் மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் இல்லாமல் நின்றிருந்தால் அந்தக் கடைகள் ஒரு வார காலத்திற்கு மூடி வைக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும், அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுமாறும், மாநகராட்சியின் அனைத்து கோவிட் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு வழங்கி கொரோனா தொற்று இல்லாத மாநகராட்சியாக திகழ முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News