வழிபாடு
பத்மாவதி தாயார்

சென்னை பத்மாவதி தாயார் கோவிலில் அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம்

Published On 2022-02-07 07:48 GMT   |   Update On 2022-02-07 07:48 GMT
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னையில் கட்டி வரும் பத்மாவதி தாயார் கோவிலில் வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடக்கிறது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைவர் சுப்பா ரெட்டி தெரிவித்தார்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் சென்னை தியாகராயநகரில் வெங்கடேச பெருமாள் கோவில் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்ளூர் ஆலோசனைக்குழு துணைத்தலைவர்களாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனின் மகனும், வேலூர் எம்.பி.யுமான கதிர் ஆனந்த், வேலூரைச் சேர்ந்த லட்சுமணன் வெங்கட சுப்பிரமணியன் மற்றும் பிரபாகர் ரெட்டி மற்றும் உறுப்பினர்களாக ஆனந்தகுமார், கிருஷ்ணராவ், கார்த்திகேயன் உள்ளிட்ட 24 பேரை தேவஸ்தானம் அறிவித்து இருந்தது.

இவர்களுக்கான பதவி ஏற்பு விழா தியாகராயநகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழ்நாடு, புதுச்சேரி மாநில ஆலோசனைக்குழு தலைவர் சேகர் ரெட்டி தலைமை தாங்கினார்.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுத்தலைவர் ஓய்.வி.சுப்பா ரெட்டி, புதிய உறுப்பினர்களுக்கான ஆணைகளை வழங்கி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது:-

திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவிலில் ஓரிரு மாதங்களில் முழுமையாக பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வாய்ப்பு உள்ளது.

சென்னை தியாகராயநகரில் உள்ள பத்மாவதி தாயார் கோவில் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்து வருகிற அக்டோபர் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. அதேபோல், ராயப்பேட்டையில் உள்ள காலி இடத்திலும் கோவில் மற்றும் திருமண மண்டபம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. உளுந்தூர்பேட்டையில் புதிதாக கட்டப்பட உள்ள வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுமானத்திற்கான ஒப்பந்தப்புள்ளி வருகிற 28-ந்தேதி கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்க இருக்கிறது.

சென்னையில் இருந்து பாதயாத்திரையாக திருமலைக்கு செல்லும் பக்தர்கள் நலன் கருதி ஊத்துக்கோட்டை மற்றும் சீத்தமாஞ்சேரி ஆகிய இடங்களில் பக்தர்களுக்கான தங்கும் இடம், குளியலறை வசதிகள் கட்டப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் வெங்கடேச பெருமாள் கோவில் கட்டுவதற்காக புதுச்சேரி அரசிடம் மாற்று இடம் வழங்கவும், திட்டங்களுக்கு அனுமதி பெற மாநகராட்சியிடம் அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தகவல் மைய வளாகத்தில் காலியாக உள்ள இடத்தில் கோவில் கட்டுவதற்காக கட்டிட கலைஞரை அடையாளம் காணுதல் மற்றும் திட்ட ஒப்புதலுக்கு நிறுவனத்திடம் அனுமதி பெறுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரில் அரசு வழங்கிய 66 ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு வரும் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஆண்டு இறுதியில் பணிகள் நிறைவடையும். சென்னை தீவுத்திடல் மற்றும் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமான முறையில் சீனிவாச பெருமாள் திருக்கல்யாணம் அடுத்த மாதம் (மார்ச்) நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News