செய்திகள்
காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்

திருச்செந்தூர் அருகே காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீர் மறியல்

Published On 2019-11-05 13:19 GMT   |   Update On 2019-11-05 13:19 GMT
திருச்செந்தூர் அருகே குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருச்செந்தூர்:

திருச்செந்தூர் அருகே உள்ள மேலதிருச்செந்தூர் ஊராட்சிக்குட்பட்ட கீழநாலுமூளைகிணறு, முருகன்குறிச்சி ஆகிய பகுதிகளில் கடந்த 2 மாதமாக குடிநீர் சீரான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து குடிநீர் தட்டுப்பாட்டால் தங்கள் பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும், இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அப்பகுதியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்நிலையில் தங்கள் பகுதிக்கு முறையாக தண்ணீர் வழங்க கோரியதற்கு நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சீரான குடிநீர் வழங்ககோரியும் கீழநாலுமூளைக்கிணறு, முருகன்குறிச்சியை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமமக்கள் இன்று காலை திடீரென்று திருச்செந்தூர் -நாகர்கோவில் சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 

 இது குறித்து தகவலறிந்த திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் முத்துராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் இன்று மாலைக்குள் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இன்ஸ்பெக்டர் உறுதியளித்ததை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

சாலை மறியலால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து திருச்செந்தூர் -நாகர்கோவில் செல்லும் பஸ்கள் பரமன்குறிச்சி, காயாமொழி, மெஞ்ஞானபுரம் வழியாக இயக்கப்பட்டது. பின்னர் மறியில் போராட்டம் முடிந்ததையடுத்து வழக்கமான பாதையில் இயக்கப்பட்டது.
Tags:    

Similar News