ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணியசுவாமி- தெய்வானை, மாணிக்கவாசகர் எழுந்தருளினர்.

மதுரை ஆவணி மூலத்திருவிழா: நரியை பரியாக்கிய இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல்

Published On 2021-08-19 04:50 GMT   |   Update On 2021-08-19 04:50 GMT
மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமியும், மாணிக்கவாசகரும் இந்த லீலை நிகழ்ச்சிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று மாலை நரியை பரியாக்கிய லீலை நடந்தது. அப்போது வடக்கு ஆடி வீதியில் உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரேசுவரர்-மீனாட்சி அம்மன், நரியை பரியாக்கிய லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். பின்னர் சுவாமி தங்க குதிரை வாகனத்திலும், அம்மன் தங்க குதிரையிலும் எழுந்தருளி ஆடி வீதிகளில் வலம் வந்தனர்.

இந்த திருவிழாவுக்கு வழக்கமாக திருப்பரங்குன்றம் சுப்பிமணியசுவாமியும், திருவாதவூரில் இருந்து மாணிக்கவாசகரும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். தற்போது கொரோனா காலக்கட்டம் என்பதால் அந்த புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. ஆனால்
மீனாட்சி அம்மன்
கோவிலில் உள்ள சுப்பிரமணியசுவாமியும், மாணிக்கவாசகரும் இந்த லீலை நிகழ்ச்சிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

விழாவில் நரியை பரியாக்கிய லீலை புராண வரலாறு வருமாறு:-

மதுரையை ஆண்ட அரிமர்த்தன பாண்டிய மன்னரிடம், மாணிக்கவாசகர் தென்னவன் பிரம்மராயன் என்ற பட்டத்துடன் அமைச்சராக பணியாற்றி வந்தார். அப்போது படைக்கு தேவைப்படும் குதிரைகள் வாங்க பெரும் பொருளுடன் மாணிக்கவாசகரை மன்னர் அனுப்பி வைத்தார்.

அவர் திருப்பெருந்துறை என்னும் தலத்தை அடைந்தவுடன் இறைவனை குருவாக பெற்ற மாணிக்கவாசகர் அங்கேயே சிவாலாய திருப்பணி மற்றும் சிவனடியார் திருப்பணி என, தான் கொண்டு வந்த அனைத்து முழுப்பொருளையும் செலவிட்டார்.

இந்த நிலையில அரசனிடம் இருந்து அழைப்பு வந்தது. அப்போது எந்த பொருளும் இல்லாமல் வெறுங்கையாக இருந்த மாணிக்கவாசகர் செய்வதறியாது இறைவனை வேண்டினார். அப்போது இறைவன் அவரிடம் ஆவணி மூலத்தன்று குதிரைகள் வந்து சேரும் என்று அரசனிடம் கூறும்படி தெரிவித்தார்.

ஆவணி மூலத்திருநாளும் வந்தது. ஆனால் குதிரைகள் வராதது கண்டு மன்னன் மாணிக்கவாசகரை சிறையில் அடைத்து துன்புறுத்தினான்.

மாணிக்கவாசகர் இறைவனிடம் தான் படும் வேதனைகள் குறித்து வேண்டினார்.

உடனே இறைவன் காட்டில் உள்ள நரிகளை எல்லாம் குதிரைகளாக்கி, சிவகணங்களை குதிரைகளின் பாகர்களாக்கி, தானே அவற்றுக்கு தலைவனாக ஒரு குதிரையின் மீதேறி மதுரைக்கு வந்தடைந்தார். அதைக்கண்ட அரசனும் மகிழ்ந்து மாணிக்கவாசகரை பாராட்டி விடுவித்தான்.

ஆனால் அன்றிரவே அந்த குதிரைகள் எல்லாம் மீண்டும் நரிகளாக மாறி காடுநோக்கி ஓடின. உடனே அரசன் மாணிக்கவாசகரை தண்டிக்க அவரை கட்டி சுடுமணலில் கிடக்க செய்தான். இறைவன் அவரை காக்கும் பொருட்டு வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கெடுக்க செய்தார், என்று வரலாறு கூறுகிறது.
Tags:    

Similar News