உள்ளூர் செய்திகள்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

தொட்டபெட்டா முதல் கட்டபெட்டு வரை மலைப்பாதையில் 16 கி.மீட்டர் ஓட்டபயிற்சி மேற்கொண்ட அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published On 2022-04-17 05:03 GMT   |   Update On 2022-04-17 05:03 GMT
அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டத்தில் சுகாதாரத் துறையின் கீழ் பல்வேறு நலத் திட்டங்கள் மற்றும் மருத்துவ கட்டமைப்புகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று மாலைக்கு ஊட்டிக்கு வந்தார்.

பின்னர் ஊட்டி தமிழகம் விருந்தினர் மாளிகைக்கு சென்ற அவர் நேற்று இரவு அங்கு தங்கி ஓய்வெடுத்தார்.

இந்தநிலையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று காலை 5 மணிக்கு தொட்டபெட்டா பகுதிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து ஊட்டி- கோத்தகிரி சாலையில் தொட்டபெட்டாவில் தொடங்கி கட்டபெட்டு கிராமம் வரை 16 கிலோ மீட்டர் ஓட்டப்பயிற்சி மேற்கொண்டார்.

ஓட்டபயிற்சியை முடித்ததும், கட்டபெட்டுவில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

ஆஸ்பத்திரி முழுவதும் ஆய்வு மேற்கொண்ட அவர், அங்கு சிகிச்சை பெற வந்த பொதுமக்களிடம் நலம் விசாரித்தார். மேலும் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு டாக்டர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்களிடம் ஆஸ்பத்திரியில் மருத்துவ வசதிகள் சரியாக உள்ளதா? என்பது குறித்தும் கேட்டறிந்தார். அப்போது டாக்டர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சுற்றுச்சுவர் மற்றும் குடிநீர் வசதி வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை உடனடியாக நிறைவேற்றி கொடுக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News