வழிபாடு
திருப்பதி

திருப்பதியில் 2 ஆண்டுக்கு பிறகு அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

Published On 2022-03-26 08:59 GMT   |   Update On 2022-03-26 08:59 GMT
இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. இதனால் 2 ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

திருப்பதி ஸ்ரீனிவாசன் தங்கும் விடுதி, பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் கோவிந்தராஜ சாமி சரித்திரம் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டிக்கெட்டுகள் பக்தர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக 10 ஆயிரம் இலவச தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.

ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட்டுகள் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்யும் வகையில் ஆன்லைனில் வெளியிடப்பட்டன. தரிசன டிக்கெட்டுகள் கூடுதலாக வழங்கப்பட்டு வருவதால் திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று முதல் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வி.ஐ.பி. பிரேக் தரிசன சிபாரிசு கடிதங்களையும் தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

இதனால் வார இறுதி நாட்களில் சாமானிய பக்தர்கள் அதிகமானோர் சாமியை தரிசிக்க வருகின்றனர்.

பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பக்தர்களின் வசதி குறித்து அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி ஆய்வு செய்தார்.

அன்னதான சத்திரம், ராம்பகீச்சா விடுதி, பஸ் நிலையம் போன்ற முக்கிய இடங்களில் அவர் ஆய்வு செய்து பக்தர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தங்கும் அறைகள் கிடைக்கிறதா? தரிசன ஏற்பாடுகள், இலவச உணவு வசதி போன்றவை குறித்து அவர் பக்தர்களிடம் கேட்டறிந்தார்.

வரிசையில் காத்திருப்போருக்கு பால், சிற்றுண்டி போன்றவை வழங்குங்கள் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

இன்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் பக்தர்களின் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலவச தரிசனத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் அங்குள்ள குடோன்களில் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுப்பி வருகின்றனர்.

இதனால் பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் காத்திருக்கின்றனர். இதேபோல் ரூ.300 ஆன்லைன் டிக்கெட்டில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களும் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதியில் நேற்று 65,418 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 33,451 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.40 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
Tags:    

Similar News