செய்திகள்

வேலூர் தொகுதியில் தேர்தல் நடக்குமா? மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உயர் நீதிமன்றம்

Published On 2019-04-17 08:37 GMT   |   Update On 2019-04-17 08:43 GMT
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. #LokSabhaElections2019 #VelloreConstituency
சென்னை:

வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அத்தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம், சுயேட்சை வேட்பாளர் சுகுமாறன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏ.சி.சண்முகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடும்போது, ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் இதுபற்றி கருத்து தெரிவித்த நீதிபதிகள், தேர்தலை ரத்து செய்யக்கூடாது என்றால் பணப்பட்டுவாடா செய்தவர்களை போட்டியிட அனுமதிக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

‘பணப் பட்டுவாடா விவகாரத்தில் சில வேட்பாளரை மட்டும் எப்படி தகுதி நீக்க முடியும்? தேர்வு செய்யப்பட்ட வேட்பாளரைத் தான் தகுதி நீக்க மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் வழிவகை செய்கிறது. எனவே, வெற்றி பெற்ற வேட்பாளர்களை மட்டுமே மக்கள் பிரதித்துவ சட்டப்படி தகுதிநீக்கம்  செய்ய முடியும்’ என்றும் நீதிபதிகள் கூறினர்.



வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை நீதிமன்றம் மறு ஆய்வு செய்ய முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் பணப் பட்டுவாடா குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டால் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்றும் கூறியது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், தீர்ப்பை ஒத்திவைத்தனர். மாலை 4.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என கூறினர். எனவே, வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெறுமா? இல்லையா? என்பது மாலை தெரிந்துவிடும்.  #LokSabhaElections2019 #VelloreConstituency
Tags:    

Similar News