பொது மருத்துவம்
ஆரஞ்சு

கொரோனாவை கட்டுப்படுத்துமா சிட்ரஸ் பழங்கள்?

Published On 2022-01-11 06:28 GMT   |   Update On 2022-01-11 09:01 GMT
கொரோனா பரவலுக்கு பின்பு சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யக்கூடியவை.
ஆரஞ்சு மற்றும் கொய்யாப் பழங்களை விரும்புவோருக்கு, குளிர்காலம் ஏற்ற பருவமாகும். இந்த சிட்ரஸ் பழங்கள் வாசனை, சுவையை தருவதோடு மட்டுமின்றி சிறந்த ஊட்டச்சத்துக்களையும் அளிக்கின்றன. எலுமிச்சை, நெல்லிக்காய், மொசாம்பி, கிவி போன்ற சிட்ரஸ் பழங்களையும் ருசிக்கலாம். குளிர்காலத்தில் சிட்ரஸ் பழங்கள் ஏன் பரிந்துரைக்கப்படுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?

கொரோனா பரவலுக்கு பின்பு சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிடுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். ஏனெனில் இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச்செய்யக்கூடியவை.

கொரோனா, ஜலதோஷம், காய்ச்சல் போன்ற தொற்றுநோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கும் பணியை நோய் எதிர்ப்பு அமைப்பு மேற்கொள்கிறது. அதற்கு சிட்ரஸ் பழங்கள் உதவும்.

சிட்ரஸ் பழங்கள் வீக்கத்தை தடுப்பதாக அறியப்படுகிறது. கீல்வாத நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பல்வேறு வகையான புற்றுநோய்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு நிறைய சிட்ரஸ் பழங்கள் உட்கொள்ள வேண்டும்.

குளிர்காலத்தில் சருமம் வறட்சி அடைவது இயல்பானது. ஈரப்பதத்தை தக்க வைப்பதோடு சருமத்திற்கு பளபளப்பு சேர்க்கும் தன்மையும் சிட்ரஸ் பழங்களுக்கு உண்டு.

சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கக்கூடியவை. வயதான தோற்றத்தை தடுக்கக்கூடிய தன்மையும் கொண்டவை. எனவே முதுமையை தள்ளிப்போடுவதற்கு சிட்ரஸ் பழங்களை நிறைய சாப்பிடுங்கள்.

மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் ஜலதோஷம், காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் வைரஸ்களின் தாக்கம் அதிகரிக்கும். சிட்ரஸ் பழங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துவதால், குளிர்காலத்தில் அவற்றை அதிகம் சாப்பிட வேண்டும்.

சிட்ரஸ் பழங்களில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அவை ஆரோக்கியத்தை பேணுவதற்கு உதவும். நல்ல ஆரோக்கியமான உடல், மன நலனை கொண்டிருந்தால் நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள முடியும். நோய்வாய்ப்பட்டாலும் கூட விரைவாக குணமடைந்துவிடலாம்.

சிட்ரஸ் பழங்கள் குறைந்த கலோரிகள் கொண்டவை. எனவே அவை ஒரு புறம் உடல் எடையைக் குறைக்கவும், மறுபுறம் ஆரோக்கியம் காக்கவும் உதவும்.

அசிடிட்டி பாதிப்பு கொண்டவர்களுக்கு சிட்ரஸ் பழங்கள் சிறந்த தேர்வாக அமையாது. மேலும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடவும் கூடாது.
Tags:    

Similar News