செய்திகள்
மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன்

கொரோனாவுக்கு எதிரான மந்தை எதிர்ப்பு சக்தியை அடைவதில் இந்தியா வெகுதொலைவில் உள்ளது - மத்திய மந்திரி

Published On 2020-09-27 19:07 GMT   |   Update On 2020-09-27 19:07 GMT
கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக மந்தை எதிர்ப்பு சக்தியை மக்கள் அடைவதில், இந்தியா வெகு தொலைவில் இருப்பதாக மத்திய சுகாதார மந்திரி ஹர்சவர்தன் தெரிவித்தார்.
புதுடெல்லி:

பெருந்தொற்று நோய் பரவுகிறபோது, அதில் இருந்து மக்கள் நிவாரணம் பெறுவதற்கு ‘ஹெர்டு இம்யூனிட்டி’ என்கிற மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்கலாம் என்பது விஞ்ஞானிகள் கருத்து. இதற்கு 2 வழிமுறைகள் உண்டு. ஒன்று, தடுப்பூசி கண்டுபிடித்து அதை பெரும்பாலான மக்களுக்கு செலுத்துகிறபோது மந்தை எதிர்ப்பு சக்தி உருவாகும். இரண்டாவது, தொற்றை எல்லோருக்கும் பரவவிட்டு அதன் மூலம் மந்தை எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும். ஆனால் இதில் ஒரு ஆபத்து, தொற்றின் வீரியம் தெரியாமல் பெரும்பாலானவர்களுக்கு தொற்றை பரவவிட்டால் அது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு.

தற்போது கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பு, மருத்துவ பரிசோதனை அளவில் இருக்கிறது. இந்த நிலையில் நாடு முழுவதும் தொற்றுபரவல் அதிகமாக உள்ள இடங்களில் செரோ சர்வே நடத்தி மக்களிடம் நோய்ப்பரவல் எந்த அளவுக்கு உள்ளது, எவ்வளவு பேருக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கிறது என கண்டறியப்படுகிறது.

அந்த வகையில் கொரோனா பற்றிய முதல் செரோ சர்வே மே மாதம் நடத்தப்பட்டது. அதில், 0.73 சதவீதம் பேருக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த நிலையில், மத்திய சுகாதார மந்திரி டாக்டர் ஹர்சவர்தன், தன்னை சமூக ஊடகங்களில் பின்பற்றி வருகிறவர்களுடன் ‘சண்டே சம்வாத்’ நிகழ்ச்சி மூலம் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் பெருந்தொற்று நோய் பரவல் தொடர்பான முதலாவது செரோ சர்வே மே மாதம் எடுக்கப்பட்டது. அது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு 0.73 சதவீதம் என்று காட்டியது.

விரைவில் வெளியிடப்படும் இரண்டாவது செரோ சர்வே, நாம் எந்த விதமான மந்தை நோய் எதிர்ப்பு சக்தியை அடைவதில் இருந்து வெகு தொலைவில் இருக்கிறோம் என்பதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன.

இது நாம் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பொருத்தமான நடத்தைகளை பின்பற்ற வேண்டும் என்பதை காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் பள்ளிகளை பல கட்டங்களாக திறப்பது தொடர்பான மக்களின் அச்சத்தையும் சுகாதார மந்திரி ஹர்சவர்தன் அகற்றினார். சலூன்கள், மசாஜ் நிலையங்களுக்கு செல்கிறபோது பொதுமக்கள் கொரோனா கால நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

பிரார்த்தனை தலங்களில் கூட அனைவரும் முக கவசம் அணிந்து இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி கூறினார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “அரசாங்கமும், மக்களும் இணைந்து நின்றால்தான் பெருந்தொற்றை எதிர்த்து போராட முடியும்” என கூறினார்.

கொரோனா வைரஸ் பரிசோதனை கட்டணங்களை குறைக்குமாறு மாநிலங்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Tags:    

Similar News