லைஃப்ஸ்டைல்
யோகா

யோகா செய்யும் போது...

Published On 2019-07-06 02:49 GMT   |   Update On 2019-07-06 02:49 GMT
யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகா பயிற்சியில் முன்னேற சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இனி யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து, நீங்கள் யோகா வகுப்பில் சேர்ந்துவிட்டால், தொடர்ந்து நீங்கள் யோகா பயிற்சியில் முன்னேற சில விஷயங்களை, விதிகளை மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யோகா அறையை ஜிம் போன்று நினைத்துக்கொள்ளக் கூடாது. உடல் கட்டுமானத்தைப் பராமரிக்க யோகா உதவுகிறது. ஆனாலும் அதனை ஜிம் அல்லது பிற உடற்பயிற்சி மையங்களுடன் ஒப்பிட முடியாது. அதாவது வேடிக்கையாக ஆரவாரத்துடன் உள்ளே நுழைவது தேவையற்றது. உள்ளே நுழையும் முன்பு உங்கள் மொபைலை அணைத்துவிடவும் அல்லது சைலன்ட் மோடில் வைத்துவிடவும். காலணிகளை வெளியே விடவும். விசாலமாக இருக்கும் இடத்தைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.

வகுப்புக்குள் நுழைந்ததும், விரிப்பை விரித்து நெருக்கமற்ற ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கே அமரவும். உங்களுக்கும் அக்கம்பக்கம் இருக்கும் பிறருக்கும் இடையே ஒருவர் செல்லும் அளவிற்கு இடைவெளி இருக்க வேண்டும். யோகவில் உங்கள் பயிற்சியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். பிறர் என்ன செய்கிறார்கள் என்று கவனிக்காதீர்கள்.

ஏனெனில் யோகா வகுப்புகளில், புதிதாக யோகா கற்றுக்கொள்ள வந்த பலரும் இருப்பார்கள், பல ஆண்டு அனுபவமிக்கவர்களும் இருப்பார்கள். அவர்களை பார்த்து, நீங்களும் அதே போல ஏதேனும் செய்ய முயற்சி செய்தால் தவறாகிப்போகலாம். அதேபோல், நன்றாகச் செய்ய முடியாத சிலரை விட நன்றாகச் செய்துகாட்டுகிறேன் என்ற மனப்பான்மையிலும் செய்யக்கூடாது.

இதற்கு நண்பர்கள் வேண்டாம். கொஞ்சம் வித்தியாசமாக தோன்றலாம். அருகில் நண்பர்கள் இருந்தால் இரண்டு விஷயங்கள் நடக்க சாத்தியமுள்ளது. ஏதேனும் ஆசனங்களை செய்ய முயற்சி செய்யும்போது, நண்பர்களின் முன்னால் செய்ய உங்களுக்கு சங்கடமாக இருக்கலாம். அல்லது உங்களில் ஒருவர் தவறு செய்யும்போது மற்றொருவர் பார்த்து சிரித்துவிட வாய்ப்புள்ளது. ஓரிரு மணி நேரம்தான் யோகா வகுப்பு. ஆகவே, நண்பர்கள் இல்லாமல் தனியாக பயிற்சி செய்வதே நல்லது.

அது உங்கள் கவனம் சிதறாமல் இருக்கவும் உதவும். வகுப்பு முடிந்த பிறகு உங்கள் நண்பர்களை சந்தித்து நேரம் செலவழித்துக் கொள்ளலாம். யோகா அறையை விட்டு வெளியேறுவதற்கு முன்பு, நீங்கள் பயிற்சி செய்த இடத்தை அலங்கோலமாக விட்டுச் செல்லக்கூடாது. யோகாவில் தன்னைத் தானே சுத்தமாக வைத்துக்கொள்வதும், மனதை சுத்தப்படுத்துவதும் தான் மிக முக்கியம். ஆகவே, நீங்கள் இருக்கின்ற இடத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதே இதன் முதல் படி. நீங்கள் வரும் முன்பு எப்படி இருந்ததோ அதே போல் அழகாக வைத்துவிட்டுச் செல்ல வேண்டும். காகிதம் போன்றவற்றை பயன்படுத்தியிருந்தால் அவற்றை குப்பை தொட்டியில் போட வேண்டும்.

எப்படி அமைதியாக உள்ளே வந்தீர்களோ அதே போல் அமைதியாக வெளியேறுங்கள். யோகா என்பது மனதையும் உடலையும் அமைதிப்படுத்துவது. உடலும் மனமும் அமைதியடையவும் அந்த அமைதி சிறிது நேரம் நீடிக்கவும் அவகாசம் கொடுங்கள். வகுப்பை விட்டு வெளியே வந்ததுமே கலகலவென்று அரட்டை அடித்தால் நீங்கள் பயிற்சி செய்து பெற்ற மன அமைதி சிதறிப்போய்விடும்.
Tags:    

Similar News