செய்திகள்
வேலூரில் திருநங்கை ஒருவருக்கு தாலி கட்டியபோது எடுத்த படம்.

கொரோனா ஒழிய வேண்டி திருநங்கைகள் தாலி கட்டி சிறப்பு வழிபாடு

Published On 2021-04-29 10:33 GMT   |   Update On 2021-04-29 10:33 GMT
கொரோனா ஒழியவேண்டி வேலூரில் 100க்கும் மேற்பட்ட திருநங்கைகள் தாலிக்கட்டி சிறப்பு வழிபாடு நடத்தினர்.
வேலூர்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இந்தாண்டு ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் வேலூர் மாவட்ட திருநங்கைகள் சார்பில் வேலூர் ஓல்டுடவுன் பஜனைகோவில் தெருவில் கூத்தாண்டவர் திருவிழா நடந்தது. இதையொட்டி அரவானை அலங்கரித்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். இதில், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கலந்து கொண்டு கும்மியடித்து சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து திருநங்கைகள் தலைவி கங்காநாயக் தலைமையில் சிறப்பு பூஜை செய்து தாலி கட்டி கொண்டனர். பின்னர் உற்சாகமாக ஆடிப்பாடினார்கள். அதையடுத்து பாரதிநகர் சுடுகாட்டில் தாலி அறுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், தாலி கட்டிக்கொண்ட திருநங்கைகள் அனைவரும் தங்களது தாலியை அறுத்து கொண்டு அழுதனர்.

இதுகுறித்து விழாவில் பங்கேற்ற திருநங்கைகள் கூறுகையில், கொரோனாவினால் கடந்த 2 ஆண்டுகளாக கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா நடைபெறவில்லை. கொரோனா ஒழிந்து நாடு இயல்புநிலைக்கு திரும்ப வேண்டும். இதற்காக சிறப்பு பூஜைகள் செய்து வழிபாடு செய்தோம். கொரோனாவில் இருந்து அனைவரும் விடுபட வேண்டும். அடுத்தாண்டு கூவாகத்துக்கு சென்று திருவிழாவில் பங்கேற்க வேண்டும் என்றனர்.
Tags:    

Similar News