ஆன்மிகம்
மயிலாடுதுறையில் மயூரநாதர் கோவிலில் கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2021-11-08 08:23 GMT   |   Update On 2021-11-08 08:23 GMT
மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் துலா உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.
கங்காதேவி உள்ளிட்ட அனைத்து புண்ணிய நதிகளும் தங்களின் பாவச்சுமைகள் நீங்க வழிசெய்யுமாறு சிவபெருமானிடம் வேண்டியபோது, பாவங்களை போக்க ஐப்பசி மாதம் முழுவதும் மயிலாடுதுறை துலாக்கட்ட காவிரியில் புனித நீராடினால் உங்கள் பாவச்சுமை நீங்கும் என்று சிவபெருமான் வரமளித்தார். அதன்படி காவிரியில் ஐப்பசி மாதம் 30 நாட்களிலும் புனித நீராடினால் அனைவரின் பாவங்களும் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் காசிக்கு இணையாக மயிலாடுதுறை காவிரி துலாக்கட்ட பகுதி விளங்கி வருகிறது.

துலா உற்சவத்தை முன்னிட்டு திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை மயூரநாதர், அறம்வளர்த்த நாயகி அய்யாறப்பர், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை வதாணேஸ்வரர், விசாலாட்சி காசிவிஸ்வநாதர் ஆகிய சாமிகள் காவிரிக்கரைக்கு எழுந்தருளி தீர்த்தம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த மாதம் 18-ந் தேதி ஐப்பசி மாத முதல்நாள் தீர்த்தவாரியுடன் விழா தொடங்கியது. ஐப்பசி 21-ம் நாள் மயூரநாதர் கோவில், வள்ளலார்கோவிலில் கொடியேற்றத்துடன் விழா தொடர்ந்து 10 நாட்கள் கொண்டாடப்படுவது வழக்கம்.

நேற்று அபயாம்பிகை மயூரநாதர் கோவிலில் கொடியேற்றத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். அங்கு கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு காலை 10 மணியளவில் கொடியேற்றம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

இதைப்போல தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான ஞானாம்பிகை வதானேஸ்வரர் (வள்ளலார்) கோவிலில் கொடிமரத்துக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றம் நடந்தது. நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கிய துலா உற்சவ விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்.

16-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) கடைமுக தீர்த்தவாரி நடைபெறுகிறது. 17-ந் தேதி.(புதன்கிழமை) முடவன் முழுக்கு நடக்கிறது. கடைமுக தீர்த்தவாரியன்று தமிழகம் முழுவதும் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறைக்கு வந்து காவிரியில் புனித நீராடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News