செய்திகள்
கோப்புபடம்

விவசாயிகளுக்கான நகைக்கடன் தள்ளுபடியில் குளறுபடி - பரபரப்பு குற்றச்சாட்டு

Published On 2021-09-28 09:52 GMT   |   Update On 2021-09-28 09:52 GMT
திருப்பூர் மாவட்டத்தில் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் 46,512 பேர். கூட்டுறவுத்துறையில் அடங்கல் இல்லாத காரணத்தால் 34,512 பேர் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:

விவசாயிகளுக்கான நகைகடன், பயிர்க் கடன் தள்ளுபடி செய்வதில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக உழவர் உழைப்பாளர்கட்சி குற்றம் சாட்டியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் கு.செல்லமுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த ஆட்சியில் இருந்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, விவசாயிகள் பெற்றிருந்த ரூ.12,112 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று சட்டப் பேரவையில் அறிவித்திருந்தார். ஆனால், அவரால் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சிக்கு வர இயலவில்லை. 

இந்த நிலையில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன், நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். ஆனால் அவர் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் கடன் தள்ளுபடியான நகையும் திருப்பித்தரவில்லை. 

கூட்டுறவுக்கடன் தள்ளுபடியும் நடைமுறையில் இல்லாத வகையில் அடங்கல் உள்ளவர்களுக்கு மட்டுமே கடன் தள்ளுபடி என்ற ஒரு புதிய நடைமுறையை உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக தகுதியான விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி கிடைக்காத வகையில் கூட்டுறவுத் துறை செயல்பட்டு வருகிறது.

உதாரணமாக திருப்பூர் மாவட்டத்தில் கடன் தள்ளுபடி பெற தகுதியானவர்கள் 46,512 பேர். கூட்டுறவுத்துறையில் அடங்கல் இல்லாத காரணத்தால் 34,512 பேர் தள்ளுபடி சலுகை பெற முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரோடு மாவட்டத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தள்ளுபடி சலுகை கிடைத்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதனிடம் எடுத்துரைத்தோம். இதற்கு அவர் கூட்டுறவுத் துறை அமைச்சர், முதல்வரிடம் பேசி பிரச்சினைக்கு தீர்வு காணலாம் என்று உறுதியளித்தார். தமிழக அரசு விவசாயிகளின் அரசு என்று கூறிக் கொண்டு வெங்காய விலையை அதலபாதாளத்துக்கு கொண்டு சென்றுவிட்டது. 

ஆகவே, வெங்காயம் விளைவித்த விவசாயிகள் படும் துன்பத்தை அரசு வேடிக்கை பார்ப்பது சரியல்ல. எனவே, உடனடியாக வெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News