லைஃப்ஸ்டைல்
மாணவர்களுக்கு நல்வழி காட்டுபவர் ஆசிரியர்கள்

மாணவர்களுக்கு நல்வழி காட்டுபவர் ஆசிரியர்கள்

Published On 2021-11-29 08:07 GMT   |   Update On 2021-11-29 08:07 GMT
ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர்.
நாம் பிறக்கையில் இந்த உலகிற்கு எதையும் கொண்டு வருவதில்லை. அதுபோல் போகும்போது எதையும் கொண்டு செல்வதில்லை. வாழும் வாழ்க்கையின் இடைப்பட்ட காலத்தில் கல்வி செல்வத்தை பெற்று பகுத்தறிவுடன் இன்புற்று வாழவேண்டும். மாணவர்களை தன்பிள்ளை என எண்ணி எப்போதும் கல்வி புகட்டுவதில் ஆர்வம் காட்டுபவர் ஆசிரியர்களே. அவர்கள் உறவு முக்கியமானது, முதன்மையானது. ஒவ்வொரு ஆசிரியரின் குறிக்கோள், மாணவர்கள் நல்லறிவுடனும், சமுதாயத்தில் வளமுடனும் சிறந்து விளங்க வேண்டும் என்பது தான். மாணவர்களின் வெற்றியே ஆசிரியரின் வெற்றி. இவர்களை விடவும் குழந்தைகள் மீது அக்கறைக் கொள்பவர் வேறு எவரும் இருக்க முடியாது. கடவுள் தன்னால் எல்லா இடத்திலும் இருந்து கவனிக்க முடியாது என்பதினால் தான் ஆசிரியரை படைத்தார் என்று கூறலாம்.

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பர். ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு நீ அர்ப்பணி என்பன மனித வரலாற்றில் வழிவழி வந்த மணி மொழியாக போற்றி பாராட்டினர். குருவாகிய ஆசிரியர் தாயாகவும், தந்தையாகவும் விளங்கவேண்டும். அறிவையும், ஆற்றலையும் மாணவர்களுக்கு அளித்து தெய்வத்தை உணர வைப்பவர்கள் ஆசிரிய பெருமக்கள்.

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு நாட்டின் நம்பிக்கையாக மாணவர்கள் திகழ்கின்றனர். அதனால் ஆசிரியர்களும், மாணவர்களை எதிர்பார்ப்பு என்னும் குறுகிய வட்டத்திற்குள் விலகி வைக்காமல் அவர்களின் திறமைகளை, தனித்தன்மைகளை வெளிகாட்ட வழிவகிக்கின்றனர். இதற்கென கட்டுப்பாடுகளை தளர்த்தி சுதந்திர சுயசிந்தனையால் மாணவர்கள் வளர அவர்களுக்கு ஆசிரியர்கள் பாதை அமைத்து கொடுக்கின்றனர்.

இதன் மூலம் மாணவர்கள் சுதந்திரமாக காற்றாடிபோல் வானுயர பறந்து வெற்றி சாதனை படைக்கலாம். கட்டுப்பாட்டிற்காக ஆசிரியர்களின் கையில் நூல் இருக்குமே தவிர அதுவே அவர்கள் விண்ணோட்டத்திற்கு தடையாக அமைந்திட கூடாது. தடைக்கல்லே உனக்கோர் படிக்கல் என்று ஊக்கத்தையும், தன்னம்பிக்கையும் ஆசிரியர்கள் ஊட்டுவதினாலேயே மாணவர்கள் சாதனையாளராக மாறுகின்றனர். ஒவ்வொரு சாதனைக்கு பின்னாலும் ஆசிரியர்களின் பங்கு ஏதோ விதத்தில் ஒளிந்திருக்கிறது.

மாணவர்களின் திறமையை தக்க நேரத்தில் வெளிக்கொணர்ந்து வாய்ப்புகள் அளித்து மேம்படுத்தி காட்டுபவர் ஆசிரியர்கள் தான். மாணவர்களின் குணநலம், தன்னம்பிக்கை, அடிப்படை கடமைகள், நல்லொழுக்கம், தலைமை தகுதி, நாட்டுப்பற்று ஆகியவற்றை கற்பிக்க ஒரு உந்துதலாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர். ஒவ்வொரு மாணவர்களின் பலத்தையும், பலவீனத்தையும் கண்டறிந்து அடையாளப்படுத்துபவர்கள் ஆசிரியர்கள்.

நாட்டின் கலாசாரம், பண்பாடு, பழக்கவழக்கம், மரபு, நாகரிகம் போன்ற அனைத்தையும் இந்த காலகட்டத்தில் குழிதோண்டி புதைக்கக்கூடிய அவலநிலைக்கு ஆளாகி இருக்கிறோம். இன்று குழந்தைகளுக்கு நல்லது, கெட்டது எடுத்துச்சொல்ல கூட்டுக் குடும்பங்கள் காணாமல் போய்விட்டன. இன்றைய பெருவாரியான மாணவர்கள் பலவீனமாக இருப்பதற்கு தைரியம் இல்லாமையே காரணம். மாணவிகளும் நன்கு படித்து நன்மதிப்பு பெற்றாலும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கலை தீர்வு காணமுடியாமல் திணறுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு தன்னம்பிக்கை, தைரியத்தையும் ஊட்டுபவர்களாக ஆசிரியர்கள் விளங்குகின்றனர்.

மாணவர்கள் நாட்டை நிர்ணயிக்கும் சிற்பிகள். அவர்களுக்கு சரியான பயிற்சி அளிக்கவேண்டும். ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளிடம் நன்மதிப்பை பெறும் வகையில் நடந்து கொள்ளவேண்டும். மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் அவசியம். ஆசிரியர் பணி என்பது தொழில் அல்ல. அது தொண்டு. மாணவர்களின் உடல் வளர்ச்சியோடு உள்ள வளர்ச்சியையும் ஆராயக் கூடியவர்கள். மற்ற துறையில் செய்யும் தவறுகள் அந்த துறையோடு நின்றுவிடும். ஆனால் கல்வித்துறையில் ஏற்படும் தவறுகள் எதிர்காலத்தையே சீரழித்துவிடும். சேவை எனக் கருதப்படும் பணிகள் பல இருந்தாலும் அவை அனைத்திலும் முதன்மையானதாகவும் சிறப்பித்து போற்றப்படுவதுமான ஆசிரிய பணியே மிகச்சிறந்த பணி.
Tags:    

Similar News