செய்திகள்
பெக்ஸ் கிருஷ்ணனை, அவரது மகன் அத்வைத் முத்தமிட்டு வரவேற்ற போது எடுத்த படம். அருகில் மனைவி வீணா உள்ளார்.

தொழிலதிபரின் முயற்சியால் மரண தண்டனையில் இருந்து தப்பிய கேரளா டிரைவர்

Published On 2021-06-10 02:12 GMT   |   Update On 2021-06-10 02:12 GMT
அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கேரள டிரைவர், தொழிலதிபரின் உதவியால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார். அவருக்கு விமான நிலையத்தில் மனைவி, மகன் கண்ணீர் மல்க வரவேற்றனர்.
திருவனந்தபுரம்

கேரள மாநிலம் திருச்சூரை அடுத்த இரிஞ்ஞாலக்குடா பகுதியை சேர்ந்தவர் பெக்ஸ் கிருஷ்ணன் (வயது 45). இவர் அபுதாபியில் ஒரு தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2012-ம் ஆண்டு பெக்ஸ் கிருஷ்ணன் ஓட்டிச் சென்ற கார் மோதியதில் சூடான் நாட்டை சேர்ந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுதொடர்பான வழக்கில் அபுதாபி கோர்ட்டு பெக்ஸ் கிருஷ்ணனுக்கு மரண தண்டனை விதித்தது.

அபுதாபி நாட்டு சட்டத்தின்படி, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்கினால் தண்டனையில் இருந்து விடுபடலாம் என்ற விதி உள்ளது. இதையடுத்து உயிரிழந்த சூடான் சிறுவனின் பெற்றோரிடம் கேரளாவை சேர்ந்த தொழிலதிபரும், லுலு குழும தலைவருமான யூசுப் அலி தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி நஷ்ட ஈடாக ரூ.1 கோடி வழங்க முன் வந்தார். சிறுவனின் பெற்றோர் கூறியதை தொடர்ந்து பெக்ஸ் கிருஷ்ணனை அபுதாபி கோர்ட்டு விடுதலை செய்தது.

இதையடுத்து பெக்ஸ் கிருஷ்ணனின் மனைவி வீணா, மகன் அத்வைத் மற்றும் உறவினர்கள் ரூ.1 கோடி வழங்கி உதவிய தொழிலதிபருக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்த நிலையில் விடுதலையான பெக்ஸ் கிருஷ்ணன் அபுதாபியில் இருந்து விமானம் மூலம் நேற்று அதிகாலை 1.45 மணிக்கு கொச்சி விமான நிலையம் வந்து சேர்ந்தார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க மனைவி வீணா, மகன் அத்வைத் ஆகியோர் இருந்தனர்.

9 ஆண்டுகளுக்கு பிறகு ஊர் திரும்பிய தந்தையை கண்டதும் அத்வைத் அவரது கன்னத்தில் முத்தமிட்டு வரவேற்றார். மனைவியும் ஆனந்த கண்ணீர் வடித்து அவரை கட்டி தழுவினார். இந்த காட்சி அங்கிருந்த அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
Tags:    

Similar News