செய்திகள்
புதுவை சட்டசபை

புதுவை சட்டசபை 18-ந்தேதி கூடுகிறது

Published On 2021-01-15 21:42 GMT   |   Update On 2021-01-15 21:42 GMT
பரபரப்பான சூழ்நிலையில் புதுவை சட்டசபை 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) கூடுகிறது.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை நடந்தது. அதைத்தொடர்ந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

சட்டமன்றமானது 6 மாதத்துக்கு ஒருமுறை கூட்டப்படவேண்டும். தற்போது 6 மாதம் முடிவடையும் தறுவாயில் உள்ளது. இந்தநிலையில் 18-ந் தேதி (நாளை மறுநாள் திங்கட்கிழமை) மீண்டும் சட்டசபை கூடுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

புதுவை அரசியலில் பரபரப்பு அதிகமாக உள்ள சூழ்நிலையில் இந்த சட்டமன்ற கூட்டம் நடைபெற உள்ளது. ஏனெனில் அமைச்சர் மல்லாடி கிரு‌‌ஷ்ணாராவ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பொதுப்பணித்துறை அமைச்சரான நமச்சிவாயமும் விரைவில் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்திகள் வெளியாகி வருகின்றன.

காங்கிரஸ் ஆட்சிக்கு தற்போது ஆதரவு அளித்து வரும் தி.மு.க.வும் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறி தனித்து போட்டியிடும் முடிவில் உள்ளது. காங்கிரஸ் ஆட்சி தொடர்பாக தி.மு.க. நிர்வாகிகளும் பகிரங்கமாக விமர்சித்து வருகின்றனர். இத்தகைய பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் புதுவை சட்டசபை கூட உள்ளது.
Tags:    

Similar News