ஆன்மிகம்
இயேசு

கைவிடாத தேவன்

Published On 2019-08-28 03:29 GMT   |   Update On 2019-08-28 03:29 GMT
இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கி கொண்டிருந்த போது 7 வார்த்தைகள் கூறினார். அதில் 3-ம் வார்த்தை, 4-ம் வார்த்தையாக என்ன கூறினார் என்பதை குறித்து தியானிக்கலாம்.
இயேசு சிலுவையில் அறையப்பட்டு தொங்கி கொண்டிருந்த போது 7 வார்த்தைகள் கூறினார். அதில் 3-ம் வார்த்தை, 4-ம் வார்த்தையாக என்ன கூறினார் என்பதை குறித்து தியானிக்கலாம்.

பொதுவாக நம்முடைய குடும்பத்திலோ, அல்லது உறவினர்களோ மரித்து போனால், இவர் நல்ல மனிதன், அல்லது எனக்கு ரொம்ப பிடித்தமானவர் இப்படி மரித்துபோனாரே என்று நாம் கண்ணீர் விட்டு அழுவது வழக்கம். ஆனால் இயேசு சிலுவையில் அறையப்பட்டு பாடுகளை அனுபவித்த போது இயேசுவின் தாயார் மரியாள் அழவேயில்லை.

ஏனென்றால், இயேசு இந்த உலகத்தில் பிறப்பதற்கு முன்னரே, இவர் உலக ரட்சகர் என்பதை தேவதூதன் உலகத்திற்கு அறிவித்திருந்தான். மேலும் சிலுவையில் கோர மரணத்தின் மூலமாகத்தான் இவர் உலகத்தை ரட்சிப்பார் என்பதை சிமியோன் என்னும் ஒரு மனுஷன் இயேசுவின் தாயார் மரியாளுக்கு தீர்க்கதரிசனமாக அறிவித்திருந்தார்.எனவே தான் இயேசு சிலுவையில் மரித்த போது அவரது தாயார் மரியாள் அழவில்லை என்று வேதம் கூறுகிறது.

இதையெல்லாம் சிலுவையில் தொங்கியபடி பார்த்துக் கொண்டிருந்த இயேசுவும் இவைகளெல்லாம் கடவுளின் சித்தத்தின்படி நடக்கிறது என்பதை நன்கு அறிந்தவராய், உன் தகப்பனையும், தாயையும் கனம் பண்ணுவாயாக என்ற தேவனின் கட்டளையின் படி தன் தாயின் எதிர்காலத்தை சிந்தித்து யோவானிடத்தில் தன் தாயை ஒப்படைத்தார்.இது இயேசு கடவுளின் கட்டளைகளை கடைபிடிக்க தவறவில்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. நாமும் நம்முடைய பெற்றோரை கனப்படுத்த வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இதைத்தான் இயேசு சிலுவையிலே 3-ம் வார்த்தையாக தம்முடைய தாயை நோக்கி, அதோ உன் மகன் என்றார் பின்பு அந்த சீடரை நோக்கி அதோ உன் தாய் என்று கூறுகிறார் (யோவான்:19-26-27).

சிலுவையில் தொங்கிய இயேசுவை பார்த்து இவர் தேவனுடைய குமாரன் என்று சொல்லுகின்றனர். பின்னர் இவர் ஏன் மரிக்க வேண்டும். இப்படி பாடுகளை அனுபவிக்க வேண்டும். தேவன் இவரை சிலுவையில் அறையாமல் காப்பாற்றலாமே? என்ற கேள்வி ஒவ்வொருவருடைய மனதிலும் தோன்றக்கூடும்.

கடவுள் கொடுத்திருக்கிற வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றிலும் மேலான வாக்குத்தத்தம் ‘நான் உன்னை விட்டு விலகுவது மில்லை, உன்னை கைவிடுவதுமில்லை’ என்ற வாக்குதத்தம் நிறைவேறும்படியாக நாம் ஒவ்வொருவரையும் கடவுள் கைவிடாதபடியும், நம்மை விட்டு விலகாமல் இருக்கவும். நம்முடைய பாவங்கள் எல்லாவற்றையும் இயேசு என்ற ஒருவர் மீது பழி சுமத்தி இவரை சிலுவையில் அறைய ஒப்புக்கொடுக் கப்படுகிறார். எனவே தான் சுத்த கண்களுடைய கடவுள் இயேசுவை கைவிடவேண்டியதாயிற்கு என்று வேதாகமத்தில் எழுதப்பட்டுள்ளது.

இதைத்தான் தேவன் சிலுவையிலே 4-ம் வார்த்தையாக என் தேவனே, என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர் (‘ எலி ஏலி லாமா சபக்தானி) என்று மிகுந்த சத்தமிட்டு கூப்பிட்டார்’ (மத்தேயு 27:46) என்று சொல்லப்படுகிறது.

நாமும் நம்முடைய தாய், தகப்பனுக்கு கீழ்படியாமல் பாவம் செய்து கொண்டிருக்கிறோமா? அப்படியில்லாமல் நம்முடைய பாவங்களுக்காக இயேசு அன்றே சிலுவையில் அனுபவித்து விட்டார். இனி நாம் பாவம் செய்யக்கூடாது என்று நாம் ஒவ்வொருவரும் கடவுளுக்கு பயந்து, தாய் தகப்பனுக்கு கீழ்படிந்து வாழ்வோம். அப்படி செய்யும் போது நம்முடைய கடவுள் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார். தேவன்தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக ஆமென்.

சகோ.பெலிக்ஸ், வீரபாண்டி.
Tags:    

Similar News