செய்திகள்
மகா தீபம் ஏற்றம்

திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது

Published On 2021-11-19 12:35 GMT   |   Update On 2021-11-19 16:03 GMT
மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் தீபத் திருவிழா கடந்த 10-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. விழாவை முன்னிட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பிரகாரத்தில் சாமி, அம்மன் மற்றும் பஞ்சமூர்த்திகள் உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தது.

10-ம் திருநாளான இன்று அதிகாலை அருணாச்சலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்து அலங்கார தீபாராதனை, சிறப்பு ஹோமம் ஆகியவை நடந்தது. இதைத்தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் கோவில் மூலவர் சன்னதியில் உள்ள அர்த்த மண்டபத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

கோவில் வளாகத்தில் சரியாக மாலை 6 மணிக்கு அர்த்தநாரீஸ்வரர் தனி வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதே நேரத்தில் திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, 2668 அடி உயர மலை உச்சியில்  இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது.. அப்போது கோவில் கொடிமரம் எதிரே உள்ள அகண்டத்திலும் தீபம் ஏற்றப்பட்டது.. மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் பக்தர்களுக்கு காட்சியளிக்கும். 40 கிலோ மீட்டர் வரை மகா தீப ஜோதி தரிசனத்தை பார்க்க முடியும்.

கோவில் வளாகம் முழுவதும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவில் வளாகத்தில் செய்யப்பட்டு இருந்த மின்விளக்கு அலங்காரமும் மனதை கவர்ந்தது.

Tags:    

Similar News